ரணிலின் பேச்சுக்கான அழைப்பு முன்நகருமா?;  சந்தேகம் தெரிவிக்கிறார் சிறிதரன் எம்.பி.

ரணிலின் பேச்சுக்கான அழைப்பு முன்நகருமா?; சந்தேகம் தெரிவிக்கிறார் சிறிதரன் எம்.பி.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி கூறியுள்ள போதும், அது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதனையும் இதுவரையில் அவர் எடுத்துள்ளதாக தெரியவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழினத்தையும்,சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றுவதை விடுத்து .இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு,முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

75 ஆவது சுதந்திரத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 57 நாட்கள் உள்ளன. இருப்பினும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி முன்னேற்றகரமான நடவடிக்கைகளை இதுவரையில் எடுக்கவில்லை. தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடப்படவில்லை.பேச்சுவார்த்தைக்கான ஒரு களம் கூட அமைக்கவில்லை.

இதன்படி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது பொய்யாக்கப்படும். நாட்டின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண என்ன வழி? எமது மொழி உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.தீர்வுக்கான அடிப்படை உரிமைகள் கூட தற்போது இல்லாதொழிக்கப்படுகிறது.

யுத்ததத்தின் ஊடாக தமிழ் மக்களை வென்று விட்டதாக கருதப்படுகிறது. இந்த மனநிலையில் இருந்துக் கொண்டு எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.நெருக்கடிக்கு தீர்வு காண எவரது ஒத்துழைப்பும் தேவையில்லை என குறிப்பிடுகின்றீர்கள். யுத்த காலத்தில் ஆயுதங்கள், புலனாய்வு தகவல்கள் அனைத்தும் வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் சமாதான விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் இல்லை என குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும். இது தான் இந்த நாட்டின் அடிப்படை என்றால் சர்வதேசம் எவ்வாறு ஒத்தழைப்பு வழங்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )