சுதந்திர தினத்திற்கு முன் இனப் பிரச்சினைக்கு தீர்வு; சர்வதேசத்தை ஏமாற்ற ரணில் முயல்கின்றார்

சுதந்திர தினத்திற்கு முன் இனப் பிரச்சினைக்கு தீர்வு; சர்வதேசத்தை ஏமாற்ற ரணில் முயல்கின்றார்

நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அரகள் எடுத்த முயற்சிகள் கூட தோல்விகண்ட நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவதை எவராலும் நம்ப முடியுமா எனக் கேள்வி எழுப்பிய முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிர்க்கட்சி .யுமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் ,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இனப்பிரச்சினைக்கு அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வை வழங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். கூட்டிணைந்த அடிப்படையில் அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட அரசும் இருந்திருக்கிறது. இந்த அரசுகள் எல்லாம் இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இவ்வாறான நிலையில் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்க முடியும் என எவராலும் நம்ப முடியுமா? உலகில் உள்ள எவரும் அவரின் இந்த அறிவிப்பை கருத்தில் கொள்வார்களா?இவ்வாறான சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளே தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கப்போவதாக அரசு கூறுகிறது.தென்னா பிரிக்காவில் உள்ளது போல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையா அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது?தென்னாப்பிரிக்காவில் இந்த ஆணைக்குழு ஆழமான விசாரணைகளை மேற்கொண்டது. கொலை, கொடூரமான குற்றச்செயல்களை செய்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணைகளை செய்தது. இதில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்த அடிப்படையிலா அமைக்கப்படவுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார் .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )