
டோஹாவில் இலங்கைத் தூதரகத்தில் உள்ள இந்து ஆலயத்தை அகற்ற முயற்சி
டோஹா கட்டாரில் இலங்கைத் தூதரகத்தில் உள்ள இந்து ஆலயத்தை அகற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை முடிந்தவரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, வெளிவிவாகரம் மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சிறீதரன் எம்.பி முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறீதரன் எம்.பி கூறுகையில்,
டோஹா கட்டாரில் உள்ள இலங்கை தூதுதரகத்தில் இந்து ஆலயமொன்றும், பௌத்த ஆலயமொன்றும் உள்ளது. அங்கு பணியாற்றும் இந்துக்கள் அங்கு வழிபடுகின்றனர். அங்கு இப்போது இந்து ஆலயத்தை மூடுவதற்கு தூதுவர் முயற்சிக்கின்றார். அது தொடர்ந்து செல்ல இடமளிக்க வேண்டும் என்று கேட்கின்றேன் என்றார்.
இதன்போது பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறுகையில்,
அங்கு தூதுவர் எந்த தடைகளையும் விதிக்கவில்லை. அங்கே வருபவர்கள் சத்தம் போடுவதால் அங்கு அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அந்த ஆலயத்தை மூடவில்லை. அதனை நடத்திச் செல்பவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். குறித்தப் பிரச்சினை தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.

