
மாவீரர் தின நிகழ்வுகளை சுமுகமாக நடத்த இடமளித்த ஜனாதிபதிக்கு நன்றி
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்காது அவற்றை நடத்திச் செல்ல இடமளித்தமை ஜனாதிபதி வழங்கிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும் என்றும் இதற்காக அவருக்கு நன்றி கூறுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, வெளிவிவாகரம் மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேலும் கூறுகையில்,
மக்கள் தங்கள் மனங்களில் நினைவு கூரும் பேராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்துடன் நடைபெற்றது. இந்த விடயத்தில் நல்லிணக்க சமிக்ஞையாக ஜனாதிபதி செயற்பட்டமை வரவேற்கத்தக்கது. சில இடங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடி கொடுக்காது நல்லிணக்க அடிப்படையில் நடந்துகொண்ட ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றோம்.
இதேவேளை வரவு செலவு விவாதத்தில் சில முக்கிய விடயங்களை கூற வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் இலங்கை போக்குவரத்து சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கும், மன்னாருக்கான ரயில் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வு காண வேண்டும்.
அத்தடன் வெளிநாடுகளில் மீனவர்கள் இலங்கை மீனவர்கள் கைதாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இங்கு கைதாகும் போது அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை உயர்ஸ்தானிகராலயம் செய்கின்றது. அதேபோன்று எங்கள் நாட்டு மீனவர்கள் பிடிபடும் போது, அவர்களை வெளியில் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை சட்டத்திற்கு முரணான வகையில் வெளிநாடு செல்லும் நோக்கில் சென்று இந்தியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக சிறைகளில் இருப்பவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

