
நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய ஆசைப்பட்டதால் வந்த வினை
யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை, ஐ. நா.வின் இலங்கை காரியாலயத்தின் முன்பாக அரசின் அமைச்சர் ஒரு சிலருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போது ஜனாதிபதி அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இளநீர் வழங்கியதும் ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதைய . அமைச்சர் நவநீதம் பிள்ளையை .திருமணம் செய்ய ஆசைப்பட்டதுமே இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படக் காரணமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்பட்டது என கூறப்படுகின்றது..யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை.ஐ. நா.வின் இலங்கை காரியாலயத்தின் முன்பாக அப்போதைய அமைச்சர் ஒருவர் ஒரு சிலருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதன்போது ஜனாதிபதி அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இளநீர் வழங்கினார் இதனை தொடர்ந்து இலங்கைக்கும்,ஐ.நா.வுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டது.
அதேபோல் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதைய அமைச்சர் நவநீதம் பிள்ளையை தான் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.இவ்வாறான கருத்துக்கள் இலங்கைக்கு சர்வதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த காலங்களில் எமது ஜனாதிபதிகள் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.அதன் பிரதிபலனை எதிர்கொண்டோம்.நாட்டின் உள்ளக விவகாரங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் சர்வதேச உறவின் தன்மையை தீர்மானிக்கும் என்றார்.

