
ஆஸி.க்கு ஆட்களைக் கடத்துவது பிள்ளையானின் சகோதரனே
கனடாவுக்கு ஆட்கடத்தல் செய்து காசு உழைக்க வேண்டியதேவை எனக்குக் கிடையாது .ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) சகோதரர் ஒருவரே ஆட்கடத்துவதாக தகவல்கள் உள்ளவெனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா.சாணக்கியன் , மட்டக்களப்பு மாவட்டத்தில் நானா ,சந்திரகாந்தனா காணி அபகரிப்பில் ஈடுபடுவது என்பதனை கண்டுபிடிக்க ஜனாதிபதி உடனடியாக விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பியே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
திங்கட்கிழமை நான் சபையில் இல்லாதபோது என்னுடைய பெயரை பயன்படுத்தி ஒரு சில கருத்துக்களை என்னுடைய மாவட்ட சக பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் சொல்லியிருந்தார். எனக்கு என்னுடைய தாய் தந்தை வைத்த பெயர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் இராசமாணிக்கம். அதுபற்றி அவருக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் அவர் அதனைப் பற்றிப் பேசலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்த்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பாக என்னுடைய பெயரைக்கூறி ஒரு விடயத்தை அவர் சொல்லியிருந்தார். காணி அபகரிப்பு பற்றி ஏதாவது இருந்தால் நான் என்னுடைய காணிகள் தொடர்பான சகல ஆவணங்களையும் தருகின்றேன். அது தொடர்பில் ஒரு குழுவை அமைத்து உடனடி விசாரணைகளை நடத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். அதேபோன்று சிவநேசத்துரை சந்திரகாந்தனின் காணிஆவணங்களையும் நான் தருகின்றேன் அது தொடர்பிலும் விசாரியுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்த காணி அபகரிப்பில் ஈடுபடுகின்றார் என்பதனை நான் ஆதாரத்துடன் சொல்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரான இவரின் ஊழல்களை கண்டுபிடிப்போம்.
இன்னொரு விடயத்தையும் அவர் சொல்லியிருந்தார். அதாவது நான் கனடாவுக்கு ஆட்கடத்தல் செய்வதாக அவர் கூறியிருந்தார். கனடாவுக்கு எப்படி விசா எடுத்து போவது என்பது தெரியாது என்பதனை திங்கட்கிழமை அவர் நிரூபித்திருந்தார். கனடாவுக்கு ஆட்கடத்தி காசு உழைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை .இருந்தாலும் கூட சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆட்கடத்தலைப்பற்றி சொல்லியிருந்தார். துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டார்,பிறேமினி என்ற பெண் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். இதனைப்பற்றி அவரிடம் கேட்க வேண்டும். நடேசன் கடத்தப்பட்டார். அத்தனையும் விட மேலதிகமாக இந்த இடத்தில் ஜனாதிபதியும் கூறியிருந்தார், அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்துவது தொடர்பில் ஏ பி.சி. என்ற செய்தியில் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி வந்த செய்தியில் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சகோதரர் என அழைக்கப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்மீது முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நான் திங்கட்கிழமை சபையில் இருந்த போதும் ஒரு முக்கிய சந்திப்புக்காக சென்று விட்டேன்.அதனால் அவரின் உரையை கேட்க முடியவில்லை என்றார்

