நாடு மீள்வதற்கு 10 வருடமாகும்

நாடு மீள்வதற்கு 10 வருடமாகும்

பொருளாதார பாதிப்பை உருவாக்கியவர்கள் சுகபோகமாக வாழும் நிலையில் பொருளாதார பாதிப்பு  மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனக்குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான  ரோஹினிகுமாரி  கவிரத்ன புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  4 ஆம்   நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தவர்கள் சுகபோகமாக வாழும் நிலையில் பொருளாதார பாதிப்பு ஒட்டுமொத்த மக்களுக்குக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.சீனி,வெள்ளைப்பூண்டு,தேங்காய் எண்ணெய் மற்றும் சீன உரம் இறக்குமதி ஊடாக இடம்பெற்ற மோசடியினால் இழக்கப்பட்ட வருமானத்தை நடுத்தர மக்கள் மீது வரி விதித்து அதனை மீளப் பெற்றுக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த மூன்றாண்டு காலத்தில் மந்தபோசனை பாதிப்பில் இலங்கை தெற்காசியாவில் 2ஆம் நிலைக்கு கொண்டு  செல்லப்பட்டது. விவசாயம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.தனி இலக்கத்தில் காணப்பட்ட பணவீக்கம் இன்று இரட்டை இலக்கமாக உயர்வடைந்துள்ளது,மறுபுறம் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.நாட்டின் ஏழ்மை நிலைமை அதிகரித்துள்ளது  இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள குறைந்தது 10 வருடங்களாவது செல்லும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

போராட்டத்தை முடக்கவும்,போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் அவதானம் செலுத்தப்படுகிறதே தவிர மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில்   கவனம் செலுத்தப்படவில்லை. 

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி,இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடு என அமைச்சரவை அங்கிகாரம் வழங்கும் அளவிற்கு நெருக்கடியை தீவிரப்படுத்தியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க பாராளுமன்றத்தில் அவதானம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்கிறார்கள்.ஒரு முட்டையை எவ்வாறு தமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பது என்று புலம்பும் நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.விவசாயத்துறையை மேம்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித திட்டங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

நெல்,சோளம்,சிறு பயிர்ச்செய்கை ஏதும் தற்போது வேண்டாம்.கஞ்சா போதும் என குறிப்பிட்டுக் கொண்டு கஞ்சாவை சட்டபூர்வமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.பசியால் வாடும் மக்களுக்கு எவ்வித தீர்வையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் உணர்வுப்பூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நடுத்தர மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

பொருளாதார பாதிப்பை உருவாக்கியவர்களால்  பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களின் ஆணையை பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )