ஓமானில் இலங்கை பெண்களை விற்பனை செய்யும் தரகர்கள் கைது

ஓமானில் இலங்கை பெண்களை விற்பனை செய்யும் தரகர்கள் கைது

சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைகளுக்காக மக்களை அனுப்பி வைப்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சுற்றுலா வீசாவில் பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை விற்கும் செயற்பாடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட அறிவித்தலை விடுத்து கூறும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பன வேறு வேறானவையே. சுற்றுலா வீசாவினால் திருட்டுத்தனமாக வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வார்களாக இருந்தால் அது வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையுடன் தொடர்புடைய விடயமல்ல. அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்ககப்பட்டுள்ளன.

டுபாய் ஊடாக ஓமானுக்கு சென்று, அங்கு அவர்களை விற்பனை செய்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் தரகர்கள் சிலரை தற்போது கைது செய்துள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து விசேட குழுவொன்றை அமைத்து இலங்கைக்குள்ளும், விமான நிலையத்திலும் இதனுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை எடுப்போம். விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் ஆகியனவும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றார்.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கைளை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )