
வலுக்கும் பலூசிஸ்தான் போராட்டம்
முதன்முறையாக பாகிஸ்தானின் அரசியல் கட்சியிடமிருந்தே, தனி பலூசிஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வெளிப்படையான குரல் எழுந்துள்ளது. கடந்த மாத இறுதியில் எதிர்க்கட்சி பி.டி.எம் (PDM) நடத்திய பேரணியில், ஜாமியத் உலமா-ஈ-பாகிஸ்தான் தலைவர் ஓவைஸ் நூரானி ஆசாத், தனி பலூசிஸ்தான் அமைக்கப்படும் அறிவித்தார்.
எதிர் கட்சியின் தனிநாடு கோரிக்கை:
மற்றும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஏற்பாடு செய்த பேரணியில், பலூசிஸ்தானை தனி நாடாக ஆக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை பாகிஸ்தானில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஜாமியத் உலமா-இ-பாகிஸ்தான் தலைவர் ஒவைஸ் நூரானி நடத்திய பேரணியில் ஆசாத் பலூசிஸ்தானை உருவாக்குவதாக அறிவித்தார். பலூசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் அரசு கொள்ளை அடிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர பலூசிஸ்தான் வேண்டி மேலோங்கும் மக்கள் போராட்டத்தினால் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவிற்கும் பாரிய தலைவலியை கொடுப்பதை களத் தகவல்களின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
கள நிலவரங்களின்படி கடந்த ஜீன் 19 இல் தென்மேற்கு பாகிஸ்தானில்
பலுசிஸ்தான் போராளிகளுக்கும் அரச பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் பலுசிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 6 போராளிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பாகிஸ்தானில் ஒரு மலைத்தொடரில் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக ஒரு ரகசிய தகவலைப் பெற்ற பின்னர் அரச பாதுகாப்புப் படைகள் நடவடிக்கையை ஆரம்பித்தன என்று இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் தலைவலி?
பாகிஸ்தானில் பலூச் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை கண்டு பாகிஸ்தான் இராணுவம் அச்சதில் உள்ளதாக்கவும் கூறப்படுகிறது.
இது சீனாவிற்கும் தலைவலியை அதிகரித்துள்ளது. ஏனென்றால், சீனா பலுசிஸ்தானில் லட்சக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது, இந்த பகுதி சீன புறநகராக மாறி உள்ளது என்றே கூறலாம். இந்த பிராந்தியத்தில் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன, இங்கிருந்து தாதுக்களை பிரித்தெடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை வளமாக்கி வருகின்றனர். இதனால், பலூச் மக்கள் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் அரசை எதிர்த்து வருகின்றனர்.
சீனாவிற்கு நிலங்களை தாரை வார்க்கும் பாகிஸ்தான் அரசின் செயலை எதிர்க்கும் பலூசிஸ்தானில் உள்ள மக்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்களின் சடலங்கள் தான் கிடைக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆயினும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போராளிகள் பாகிஸ்தான் இராணுவத்தை தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த மே இறுதியில் பாகிஸ்தான் துணை ராணுவப் படைகளின் மீது நடத்திய தாக்குதலில் 14 அரச வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் பலுச்சிஸ்தான் விடுதலையை கோரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் எப்போதும் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டமான CPEC திட்டதை எதிர்த்து வருகிறது.
பலூசிஸ்தான் தனிநாட்டு போராட்டம் :
1947ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவை பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.
இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எதுவாயிருந்தாலும் பாகிஸ்தானில் கோலோச்சுவது பஞ்சாபி முஸ்லீம்களும் சிந்தி முஸ்லீம்களுமே. இவர்கள் பலூச்சிகளையும் பக்தூனியர்களையும் (பத்தானியர்கள்) நீண்ட காலமாக ஒடுக்கி வருகின்றனர். அதனை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவ்விரு இனங்களும் விடுதலை கோரிப் போராடி வருகின்றன.
பொருளாதார ரீதியாக, மற்ற பாகிஸ்தானியர்களுடன் ஒப்பிடும் போது பலூச்சிகள் தனிநபர் வருமானம் மிகக் குறைவு. கட்டமைப்பு ரீதியான பொருளாதாரச் சுரண்டல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) இருந்து பெரும்பாலான பலூச் சமூகத்தை விலக்கியது மற்றும் பிற பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை பலூச் மக்களை போராட்ட வழியில் செயல்படத் தூண்டின.
பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
பலூசிஸ்தான் வரலாறு:
பிரிட்டீஷிடம் இருந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பலூசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெற்றது. இதையடுத்த 1947, டிச.16-ஆம் தேதி அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழியப் பட்டது. ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன. இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
மறைமுக இந்திய ஆதரவு:
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியர்கள் தார்மீக ஆதரவு செய்வதாக பலூசிஸ்தான் விடுதலை மன்றமான ‘ஹிந்த் பலூச்’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில் பலூசிஸ்தான், பிரிட்டிசிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோதிலும், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப் பட்டது.
பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர உரிமைகளுக்காக இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர். தங்களது அடையாளம், கலாசாரம் ஆகியவற்றின் மீது பலூசிஸ்தான் மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர் என்றும் கூறினார். தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதால் பாகிஸ்தானில் இருந்து பிரித்து பலூசிஸ்தான் தனிநாடாக அமைக்க இந்தியா உதவ வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. இதனிடையே பலூசிஸ்தானில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
பலூசிஸ்தான் போராட்ட சக்திகள்:
இந்நிலையில் பலூசிஸ்தான் சுதந்திரம் வேண்டி தனி நாடு தொடர்பாக பலூசிஸ்தான் சுதந்திர மன்றம் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் பலூசிஸ்தான் ஜனநாயகக் கட்சி, பலூசிஸ்தான் தேசிய இயக்கம், பலூசிஸ்தான் மக்கள் கட்சி, நாடு சாரா தேசிய அமைப்பு, அல்வாஸ் அரபு முன்னணி மற்றும் ஏப்ரல் 15 அல்-அவாஸ் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கலந்துகொண்டுள்ளன.
பலூசிஸ்தான் விடுதலைப் படை பயங்கரவாத அமைப்பு கிடையாது என்றும் அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடுபவர்கள். அந்நிய படையெடுப்புகளில் இருந்து தங்கள் நிலத்தை பாதுகாப்பவர்கள். ஆனால், அதனை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது தவறு என்றும் வாதிடுகின்றனர்.
தங்கள் நிலத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க நினைக்கும் சீனாவுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அதனால் தான் அரசியல் காரணங்களுக்காக பலூசிஸ்தான் விடுதலைப் படையை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்துள்ளது. பலூசிஸ்தானில் மனித உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டன. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளால் இப்பகுதி சுடுகாடாகி விட்டது என பலூசிஸ்தான் சுதந்திர மன்றம் கூறியுள்ளது.
பலுசிஸ்தான் நீண்ட காலமாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோருகிறது. மேலும் பல பில்லியன் டாலர்கள் சுரண்டப்படும், சீனாவால் தொடங்கப்பட்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை எதிர்க்கும் பலூச் இனத்தவர்கள், பாகிஸ்தான் இராணுவத்தின் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையையும் எதிர்கொள்கின்றனர்.
பலுசிஸ்தான் அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் மாணவர்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் இரகசிய அமைப்புகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
ஏராளமான பலூச் இளைஞர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்
பலூசிஸ்தான் இனப்படுகொலை:
பலூசிஸ்தான் மக்கள் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தால் திடீரென நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், பலூசிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அதற்கு எதிரான மற்றும் தனிநாடு போராட்டங்களை தீவிரப்படுத்தி சர்வதேசமெங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர கோஷங்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.
பலுசிஸ்தானில் இசுலாமியப் படையெடுப்புகள்:
இசுலாமிய மதம் பரப்புவதற்காக, கிபி ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை கைப்பற்றிய அரேபியர்கள் பலுசிஸ்தான் மீது படையெடுத்து, பலூச்சி மக்களை இசுலாமிற்கு மதம் மாற்றினர். கிபி பத்தாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் ஆட்சி பலுசிஸ்தானில் அமைந்தது. கிபி 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசில் இருந்த பலுசிஸ்தான், 14ம் நூற்றாண்டில் தைமூர் பேரரசில் சென்றது. கிபி 15ம் நூற்றாண்டு முதல் முகலாயப் பேரரசில் ஒரு பகுதியாக பலுசிஸ்தான் இருந்தது. கிபி 17-ஆம் நூற்றாண்டில் முதல் 1948 முடிய பலுசிஸ்தான், பிரித்தானிய இந்தியா அரசின் கீழ் ஒரு சமஸ்தானமாக விளங்கியது.
1948 இல் முகமது அலி ஜின்னா ஆட்சி:
1948 பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டப்படி, பலுசிஸ்தான் மன்னராட்சிப் பகுதி, பாகிஸ்தான் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னாவும், அவருக்குப் பின் வந்தவர்களும், பலுசிஸ்தானை 1955ல் கலைத்தனர், பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய ஒரு நாட்டுக் கோட்பாட்டினால், பலுசிஸ்தான் பழங்குடி மக்களுக்கு மைய அரசில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காத காரணத்தினால்,
நவாப் நௌரோஸ் கான் குழுவினர், பாகிஸ்தான் அரசுப் படைகளுக்கு எதிராக 1958 முதல் 1959 முடிய ஆயுதமேந்தி கொரில்லாப் போரில் ஈடுபட்டனர்.
இறுதியாக நவாப் நௌரோஸ் கான் குழுவினரை சிறை பிடித்து தூக்கிலிட்டு, பலுசிஸ்தானியர்களின் கிளர்ச்சியை அடக்கினர்.1960களில் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் வெடித்தது. பாகிஸ்தான் அரசுப்படைகளுக்கு எதிராக 1963 முதல் 1969 முடிய கொரில்லாப் போர் நடைபெற்றது. பலுசிஸ்தானியர்களின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, 1970ல் பாகிஸ்தான் அதிபர் யாகியா கான் ஒரே நாடு, ஒரே அரசு என்ற ஒரு அலகு கோட்பாட்டை கைவிட்டு, பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக அங்கீகரிப்பட்டதுடன், அனைத்து மாகாணங்களுக்கும், மைய அரசின் அதிகாரங்களைப் பிரித்து வழங்கினார்.
அலி பூட்டோ காலத்தில்:
1973ல் பாகிஸ்தான் அதிபராக இருந்த சுல்பிக்கார் அலி பூட்டோ, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாண அரசுகளை கலைத்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தார். இதனால் தனி நாடு கோரி, மீர் அசர் கான் ராம்கனி தலைமையில் பலுசிஸ்தான் மக்கள் விடுதலைப் படை என்ற ஆயுதமேந்திய அமைப்பு தோன்றிது. பலுசிஸ்தான் கொரில்லாப்படைகளுக்கும், ஈரான் உதவியுடன் கூடிய பாகிஸ்தானிய இராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதல்களில், பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் 300 – 400 வரையும், பலுசிஸ்தான் கொரில்லா வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 7,300 – 9,000 வரை கொல்லப்பட்டனர்.
2004ல் பலுசிஸ்தான் தனி நாடு கோரும் புரட்சிப் படையினரால், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருந்த குவாதார் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர். 2005ல் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்கள் நவாப் அக்பர் கான் புக்தி மற்றும் மீர் பாலச் மர்ரி ஆகியோர் பாகிஸ்தான் அரசுக்கு 15 அம்ச கோரிக்கையை அனுப்பினர். 15 அம்ச கோரிக்கையின் முக்கியமானது, பலுசிஸ்தானில் கிடைக்கும் கனிம வள வருவாயில் கனிசமான பங்கு பலுசிஸ்தான் மாகாண அரசுக்கு வழங்குதல் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளுக்காக, பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பெருந்தொகை வழங்க ஈட்டுத்தொகையாக வேண்டும் என்பதே.
பெர்வேஸ் முஷாரஃப் ஆட்சியில்:
ஆகஸ்டு 2006ல் புரட்சிப்படைத் தலைவர் நவாப் அக்பர் கானை பிடிக்க வந்த, இராணவ வீரர்களில் 60 பேர் மற்றும் 7 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப்பின் கட்டளையால் பலுசிஸ்தான் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. குண்டு வீச்சில் பலுசிஸ்தான் விடுதலைப் படைத் தலைவர் நவாப் அக்பர் கான் கொல்லப்பட்டார்.
3 ஏப்ரல் 2009ல் பலூசிஸ்தான் தேசிய இயக்கத் தலைவர் குலாம் முகமது பலூச் மற்றும் அதன் இரண்டு துணைத் தலைவர்களையும், கை விலங்கிட்டு, கண்களை துணியால் மூடி சரக்கு வாகானத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர்.ஐந்து நாள் கழித்து 8 ஏப்ரல் 2009ல் கடைவீதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த மூவரின் உயிரற்ற சடலங்கள் கடைவீதியில் கண்டெடுக்கப்பட்டது.
சீனாவின் நட்புக்கரம்:
இப்போது பாகிஸ்தானிற்கு பலுச்சிஸ்தான் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரும் இவர்களின் போராட்டத்தை நசுக்குவதில், சீனாவும் நட்புக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37% மக்கள் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கைக்கு வாக்களித்தனர்.
பலுசிஸ்தானின் மோதல்களைத் தீர்க்க அரசியல் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்றும், பலுசிஸ்தானின் முக்கிய பிரச்சினைகள் அரசியல் மற்றும் பொருளாதாரம், பரஸ்பர புரிதல், சமரசம் மற்றும் பலூச்சின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பொய்யான வாக்குறுதிகள் நிலைமையை மேலும் மோசமாக்கும். பாகிஸ்தான் அரசு ஸ்திரத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் விரும்பினால் மக்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா

