
மலையகத் தொழிலாளர்மீது பொலிஸார் அடக்குமுறை நாங்களும் ஜெனிவா போக வேண்டி வடிவேல் எம்.பி
மலையக தோட்டத் தொழிலாளர்களின் மீது பொலிஸார் அடக்குமுறைகளை முன்னெடுப்பதாகவும், அவ்வாறு அந்த மக்கள் மீது கை வைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போது நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் சார்பாக பேசும் போது பெருந்தோட்டங்களில் நிலவும் தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையங்களில் தீர்த்து வைக்கும் கேவலமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தொழில் அமைச்சு, தொழில் ஆணையாளர், தொழிற்சங்கங்கள் இருக்கும் நிலையிலேயே பிரச்சினைகளை பொலிஸ் நிலையங்களில் தீர்த்துவைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேசத்தில் ரொசட் தோட்டத்தில் கணகரட்ணம் என்ற தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் அராஜகமாகவே அமைந்துள்ளது. பொலிஸ் நிலையங்களுக்கு யார் இவ்வாறான அதிகாரங்களை வழங்கியது. இவர்களால் எப்படி தொழிற்சங்க பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
களவு செய்பவர்கள், கொலை செய்பவர்கள் மற்றும் கசிப்பு தொழில் குற்றவாளிகள் உள்ளிட்டோரை கைது செய்யாது அப்பாவிகளை தாக்கும் அளவுக்கு பொலிஸாருக்கு யார் அதிகாரத்தை வழங்கியது. அவ்வாறு அதிகாரத்தை வழங்க முடியாது. இதனால் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எமது பெருந்தோட்ட மக்களை மிருகங்களை போன்று நடத்துகின்றனர். ஏன் இந்த நாட்டில் 200 வருடமாக வாழும் மலையக மக்களை தேசிய இனமாக பிரகடனப்படுத்தவில்லை. மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி கேள்விக்குறியாகவே உள்ளது. அங்கு தமிழர்களை நியமிக்க வேண்டும்.
அங்கு பொலிஸ் நிலையங்களில் மலையக மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களும் ஜெனிவா போக வேண்டி வரும். மலையக மக்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்வர்.

