கிழக்கு மாகாணத்தை ஆளுநர் முற்றாக நாசமாக்கிவிட்டார்; சாணக்கியன் எம்.பி. கடும் விசனம்

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் முற்றாக நாசமாக்கிவிட்டார்; சாணக்கியன் எம்.பி. கடும் விசனம்

கோத்தபாய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்திவிட்டார் எனக் குற்றம் சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் ,மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் எனவும் கூறினார்.

பாராளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி. மேலும் பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் தரைகள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை.கோத்தபாய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார்.இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.இதனால்

பால் உற்பத்தி தொழிற் துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள்.இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம், இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம்.தற்போது மீண்டும் அவர்கள் அங்கு வந்துள்ளனர். எனவே நாங்கள் மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என்றார்.

இதன்போது எழுந்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும்,கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.இவ்விடயத்தில் உணர்வு பூர்வமாகவும்,பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.உத்தியோகப்பூர்வமான அறிவிப்பதாயின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள். அதனை அரச அதிபருக்கு வழங்க முடியும்.சேதனப் பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் நெருக்கமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது .எனவே இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )