மக்களின் எதிர்ப்பு வலுத்து வருவதால் அடி பணியும் நிலையில் அரசு; அதிஉயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை செயலிழக்கச் செய்ய ஆராய்கிறார் ஜனாதிபதி

மக்களின் எதிர்ப்பு வலுத்து வருவதால் அடி பணியும் நிலையில் அரசு; அதிஉயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை செயலிழக்கச் செய்ய ஆராய்கிறார் ஜனாதிபதி

கொழும்பில் பல்வேறு பிரதேசங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்கச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்கச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாறு அதனை செயலிழக்கச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செலயகம், பொலிஸ் தலைமையகம், பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகனடப்படுத்தி கடந்த வாரத்தில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்தி அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, இது தொடர்பான 2298/53 இலக்க வர்த்தமானியை மீளப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலை கடுமையாக எதிர்க்கின்றன.

அத்துடன் இவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்படுவதன் ஊடாக கொழும்பு நகரை மையமாக கொண்ட பொருளாதார செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்கச் செய்வதற்கு ஆராயுமாறு ஜனாதிபதியினால் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அதனை செயலிழக்கச் செய்வதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )