ஏக்கம்!

ஏக்கம்!

பகற் பொழுதுகள் – இங்கே
சுருக்கமானவை….!
கடுகதியில்
சுழன்றோடும்
இயந்திர வாழ்வு…!
வேலை…. வீடு….
மறுபடி
வேலை…. வீடு….
திரும்பிப் பார்க்க முன்னே
பொழுது சாய்ந்துவிடும்…!!

இரவுகள் அப்படியல்ல…!
அவை நீண்டவை….
மிக நீண்டவை…
அழகிய பொழுதுகள்,
பழகிய மனிதர்கள்,
தோள் கொடுத்துதவிய
உன்னத வீரர்கள்…
பிறப்புகள்… இறப்புகள்..!
என்று….
தொலையாத எங்கள்
வண்ணக் கனவை
புரட்டிப் பார்த்து – நான்
தூக்கம் தொலைந்த
இரவுகள் ஏராளம்…!!

என் தாய்நிலமே…!!
உனக்கும் எனக்குமான
பந்தம்
நெருக்கமானது….. அழகானது…
சாவினாலும்
பிரிக்க முடியாதது..!

பாதி நாட்கள்– மனம்
அமைதி இழந்து
அல்லாடும்..!
நினைவுகள் துரத்தும்…!
அப்போதெல்லாம்…
உன் நினைவுதானே
என் மனதை
மயிலிறகாய் வருடி
அமைதி தந்திருக்கிறது….!!

பாம்பாய் வளைந்து
நெளியும்
குச்சொழுங்கைகள்…
வண்டிற் பாதைகள்,
வயல் வரப்புகள்.
செழித்து வளர்ந்த
வாழைத் தோப்புகள்…
காய்ந்து கிடக்கும்
கலட்டி நிலத்திலும்
மேய்ந்து திரியும்
ஆட்டு மந்தைகள்.

கோவில் திருவிழா….
ஒலி பெருக்கி கதறல்…
சோளகக் காற்று
சோவெனப் பெய்யும்
மாரி மழை….!!!
எதை நினைக்க?
எதை விட…?

உன்னைப் பிரிந்து
அந்நிய தேசத்தில் வாழ்க்கை!
விடியற் பொழுதில்
வாசற்கதவை
திறக்கும்போது…
இன்னமும்
வண்டில் மாட்டின்
சலங்கைச் சத்தத்திற்காய்
மனதுகிடந்து அடித்துக்கொள்ளும்!
காதில் விழுவதென்னவோ
விரையும் கார்களின்
உறுமல் சத்தம் மட்டுமே…!!

பறவைகளின் கீச்சொலிகூட
இங்கு பிடிக்கவேயில்லை!
வாசல்வரை
வந்து போகும்
மைனாக் குஞ்சைத் தவிர…

விடியற் பொழுதில்
கோழி கூவுதற்காய்
காத்திருக்கும் மனது
எதையும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…

சப்பாத்து நாடாவை
இறுக்கும் போதெல்லாம்
புழுதி மண்ணில்
வெற்றுக் காலால்
அளையத் தோன்றும் எனது
ஏக்கத்தை
பிள்ளைகளால் கூட
புரிந்து கொள்ள முடியவில்லை!!

பாவம்…!! அவர்களும்தான்
என்ன செய்வார்கள்?
தேசத்தைத் தொலைத்த
பெற்றோருக்கு
அந்நிய மண்ணில்
அகதியாய்ப் பிறந்தவர்கள்…….!!

வெவ்வேறு மொழிகள்…
பல நாட்டுக் கலாசாரம்..
கடுகதி வாழ்க்கை.
தலையசைப்புடன்
அயலாருடனான உறவு
முடிந்து போகும்..!!
மிஞ்சிப் போனால்
ஒரு ‘மோர்னிங்’
மனத்திலிருந்து வராமல்
உதட்டிலிருந்து மட்டுமே
எழும் உபசார வார்த்தைகள்…!!

என் தாய்மண்ணே..!!
என்
அடுத்த தலைமுறை
உன்னிலிருந்து
தள்ளியே இருப்பது
வேதனை தருகிறது!!

எங்கள் தலைமுறையினர்
அப்படியல்ல
நான்றிந்த பலர்
கால் இங்கும்
மனம் அங்குமாக
அல்லாடுகிறோம்…!

ஆனாலும்…
நாங்களும்கூடத்தான்
அந்நிய மண்ணின்
சொகுசு வாழ்வுக்கு
பழக்கப்பட்டுவிட்டோம்..

மறுபடி
கட்டாந்தரையில்
பாய் விரித்துப்
படுக்க முடியுமா?
தோட்டத்தில் இறங்கி
தண்ணீர் பாய்ச்ச
உடம்பு வணங்குமா..?
அடுப்பு மூட்டி
சமையல் ஆக்கவும்
பொடிநடையாக
ஊரை அளக்கவும்
முடியமா…?
தெரியவில்லை…

உன்னைப் பிரிந்த
ஏக்கம் மட்டுமே
நெஞ்சக் கூட்டில்…….

-கார்த்திகை

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )