
எல்லை தாண்டும் ஆதிக்கம்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தி வந்த இந்தியா இப்போது இந்தோ – பசுபிக் பிராந்திய நலனில் தனது நிலையை பலமாக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருக்கும் இலங்கை யார் பக்கம் சரிந்தாலும் அது தனது பாதுகாப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதால் இலங்கையில் தனக்குரிய பிடியை எப்போதும் பேணி வந்திருக்கிறது இந்தியா. இதெல்லாம் நன்கு தெரிந்தும், தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் தளமும் வளமும் கொடுத்து பேணி வந்தது தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவே என்று இன்னும் மக்களின் காதில் பூச்சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் எமது தமிழ் அரசியல்வாதிகள். இலங்கை சிங்கள, பௌத்த ஆட்சிகொண்ட ஒரு ஒற்றையாட்சி நாடு என்பதில் இந்தியாவுக்கு எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இது இரண்டாக உடைந்து தமிழர் தாயகம் தனியாகப் பிரிந்து போவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அது இந்தியப் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று பார்க்கிறது அது. 2009 இல், ஊடுருவலுக்கு இடங்கொடாத புலிகளை அழிப்பது என்ற பெயரில், தமிழினப் படுகொலையில் இந்தியா பெரும்பங்கு வகித்ததை மறக்க முடியுமா?
சுதந்திர இலங்கைக்கு யாருடனும் கூட்டு வைக்கும் உரிமை இருக்கிறது. அது தனக்குப் பாதகமாக அமையும்போதெல்லாம் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா கையிலெடுக்கும் ஆயுதம்தான் தமிழர் பிரச்சனை. பல தசாப்தங்களாகவே தன் உளவு நிறுவனமான ‘றோ’ (RAW) முகவர்களை தமிழர் தாயகத்தினுள் இறக்கி தன்னை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருப்பது பலரும் அறிந்ததுதான். புலிகள் காலத்தில் எந்த அந்நிய சக்திகளும் தமிழர் பிரதேசங்களில் அத்துமீற முடியாமல் இருந்ததும் பல ‘றோ’ முகவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதும் ஞாபகமிருக்கும். இப்போது அப்படியா? போர் மௌனிக்கப்பட்டபின், கேட்க யாருமற்ற நிலையில் தமிழர் தத்தளிப்பதற்கு அந்நிய நாடுகளுக்கு எடுபிடிகளாக இருக்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். ‘ஆற்று நீர்தானே.. அம்மா குடி…! அய்யா குடி…!’ என்று எங்கள் அனுமதி இல்லாமலேயே அந்நியதலையீடுகள், குறிப்பாக இந்தியா, எங்கள் நிலத்தில் தொடர்கின்றன.
இளைஞர் அமைப்புகள், சமய அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் வியாபாரிகள்…. என்று பல்வேறு வழிகளில் இந்திய உளவாளிகள் எம்மண்ணில் தொடர்ந்தும் ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.சாதி, மதம், வர்க்கம் என்று பிரிவினையைத் தூண்டுவதுமட்டுமல்லாமல் மறுபடியும் மக்கள் தமக்குத் தீர்வு வேண்டும் என்று ஒன்றிணையாமலும் பார்த்துக் கொள்கிறார்கள் இவர்கள். மக்களை ஏதேதோ பிரச்சனைகளுக்குள் தள்ளி, அவர்களுக்கு சிந்திக்க அவகாசம் கொடுக்காமல், இறுதியில் இந்தியா வந்துதான் எமக்கு நல்ல தீர்வை வாங்கித்தரும் என்ற மனப்பாங்கை மக்களிடையே ஸ்திரப்படுத்தும் முயற்சியே இது.அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டார்கள். ஏற்கனவே, எமது அரசியல்வாதிகள் துணையுடன் சம்பூரில் 500 ஏக்கர், வவுனியா வடக்கில் 300 ஏக்கர் நிலப்பரப்புகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. மக்களின் கருத்துக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படாமல் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்திய அதானி நிறுவனம். யாழ் மாவட்டத்தைச் சூழவுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் தன்னிச்சையாக மின் உற்பத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது இந்தியா.
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வாழ்விழந்து நிற்கிறார்கள் நமது மீனவர்கள். இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. கடற்தொழிலமைச்சர் டக்ளஸ் மீனவர்களுக்கு எந்தத் தீர்வும் காணாமல் சம்பந்தமேயில்லாமல் யாழ் பல்கலைக்கழக கட்டடம் திறந்து வைக்கிறார். கோவில்கள் இருக்கும் இடங்கள் அத்தனையிலும்,குறிப்பாக உயர்ந்த நிலமட்ட, மலைப் பகுதிகளில் விகாரைகள்தான் இருந்தன என்றுநிறுவுவதற்கு பகீரதப் பிரயத்தனப் படுகிறது இலங்கை தொல்பொருள் ஆய்வு மையம். இதை மௌனமாக வேடிக்கை பார்க்கிறது இந்தியா. இந்த நிலையில், யாழ் பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘இந்து கற்கைப் பீடம்’ 50 மாணவர்களை உள்வாங்கியிருப்பதன் பின்னணியில் இந்தியக் கரங்கள் உள்ளனவா? இவர்களுக்கு பின்னாளில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும் சாத்தியம் உண்டா? என்ற கேள்வி எழுகிறது.
இப்போது, ‘இந்தி’ படித்தால் இந்திய பல்கலைக்கழகமான IIT யில் புலமைப்பரிசிலில் படிக்க முடியும் என்ற புனைகதையுடன் பாடசாலை மாணவர்களுக்கு இந்தி கற்கை வகுப்புகளை ஆரம்பித்துள்ளது பிரபல யாழ் இந்துக் கல்லூரி.தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வலுவாக இருக்கும் நிலையில், யாழில் இந்தியா?IIT ஒரு சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்பதிலும் அது உலகின் மதிப்புமிக்க நிறுவனர்களில் பலரை உருவாக்கியிருக்கிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அண்மையில் கூட 7 நாடுகளில் தனது பல்கலைக்கழகங்களை அமைக்க அங்கீகாரம் பெற்றுள்ளதுIIT. அதற்கும் இந்தி கற்கைக்கும் என்ன சம்பந்தம்? இந்தி என்பது தொழில் முறைக்குரிய ஒரு மொழி அல்ல.(not a professional language). பிரெஞ்ச், ஸ்பானிஷ், லத்தீன், ஜப்பனீஸ்…. என்று வேறு மொழிகளைப் படிக்கும் போது உயர்கல்வி,அந்தந்த நாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் என்று பயன் உண்டு. இந்தியால் என்ன பயன்? மொழியறிவிற்காக வேண்டுமானால் படிக்கலாம். ஆங்கில அறிவும், உயர்தரத்தில் நல்ல சித்தியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் IITயில் படிக்க விண்ணப்பிக்கலாம் என்பதுதான் உண்மை. எங்களுடைய கல்விமான்களுக்கும் இது தெரியும். இவர்களும் விலை போய்விட்டார்களா என்ன?தமிழ்ப் பிரதேசத்துக்கு, கடல்தாண்டி இந்தி எடுத்து வரப்பட்டதை ஒரு கற்கைநெறிதானே என்று சாதாரணமாக எடுத்துவிட முடியாது.
ஆழமாகப் பார்த்தால், அடுத்த தலைமுறையை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தும் இந்திய முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில், நீண்டகால நோக்கில், இந்தோ – பசுபிக் ஆதிக்கப் பனிப்போரின் அரசியலுக்கு ஏற்றவாறு, எங்கள் இளைய சமுதாயம் இப்போதே தயார்படுத்தப் படுகிறதா என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

