
அற்புத அகிலம்!!
ஆகா…! ஆகா……! -இது
அதிசய அகிலமல்லவா?
மாசற்ற மானிடத்தின்
சங்கம உற்சவமல்லவா?
என்றுமில்லாத எழில் நிரம்பிய
வண்ணக் காலமல்லவா…?
அன்பு பொங்கும் உள்ளங்களின்
ஒன்றித்த பயணம்
அச்சமில்லை துச்சமில்லை
யாருக்கும் யாரும் குறைச்சலில்லை!!
பச்சைமரக் குழைகளை
ஆடையாக்கி, அங்கத்தில் பதித்தபடி
பழமரக் காட்டிற்குள்
பவனி வருகிறோம்!
பட்டாம் பூச்சிகளைப்
பார்த்து, பலவித்தை பயில்கின்றோம்.
எட்டா மரக்கிளையை
எட்டிப் பிடிக்க முயல்கின்றோம்!!
பாகுபாடு கொஞ்சமுமில்லை
பாசத்திற்குப் பஞ்சமுமில்லை
பழகுவதும் சுலபமாகி
தோழமை ஊஞ்சலாடுகிறது
காயப்படுத்தாத நேயர்களின்
ஒருமிப்பு ஓங்குகிறது!!
எதற்காகப் பிறப்பெடுத்தோம்?
கேள்வி வருகிறது…
வாழத்தான் வந்திருக்கிறோம் – வாழ்க்கையை
வாழத்தான் வந்திருக்கிறோம்.
ஒன்றாகப் பதில் உரைத்தோம்.
நாமெல்லாம் யார்…?
மறுகேள்வி வருகிறது.
சொந்தங்கள் தான் சாமி
சொந்தங்கள் தான்.
சேர்ந்து குரல் கொடுத்தோம்.
மகிழ்ந்திருங்கள்…
மகிழ்ச்சிக் கடலில்
குளித்திருங்கள்…
அந்தக் குரல் சொன்னது
ஆணுமில்லா பெண்ணுமில்லா
ஒரு குரல் அது
இரண்டும் கலந்திருக்கும்
அருவுருவம்!
அதில் ஒரு அர்த்தமுண்டு…
ஆணும் பெண்ணும் சமமே…!!
அற்புத தேசம்!
அழகிய தேசம்!
ஆனந்த தேசம்!
அடிமைப் படுத்தாத தேசம்!!
அட….. இது
கண்ணயரக் கண்ட கனவா? இல்லை
கண்மூடி மனம் விழித்திருக்க
முளைத்த கற்பனையா?
இந்த அற்புத தேசத்தினுள்
பிரவேசிக்கும் பாக்கியம்
மறுபடி கிடைக்குமா?
நிஜத்திலும்…
இப்படியொரு உன்னத உலகம்
காணவேண்டும்….
பல வினாக்களுக்கு
விடை
யாரறிவார்……?
-சு ஜனா