பொதுமன்னிப்பில் ரஞ்சன் விடுதலை

பொதுமன்னிப்பில் ரஞ்சன் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறினார்.

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் அவர் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நிபந்தனையுடன் ரஞ்சன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி செயலாளரும் கையெழுத்திட்ட பின்னர், வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த ஆவணம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே நீதி அமைச்சின் ஊடாக அவரின் விடுதலைக்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆவணங்களை ஆராய்ந்த சிறைச்சாலைகள் திணைக்களம் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அவரின் நண்பர்களும், அவரின் ஆதரவாளர்களும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் சென்றிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )