சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தமிழீழம் அமைவதே தீர்வு; சென்னையில் சிவாஜிலிங்கம்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தமிழீழம் அமைவதே தீர்வு; சென்னையில் சிவாஜிலிங்கம்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு என நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடர் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். இருப்பினும், அந்தக் கப்பலின் பயணம் தொடர்கிறது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைப்படவில்லை.

இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம் சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே, இலங்கை அரசு அவர்களுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அத்துடன், இலங்கையின் வட-கிழக்கில் உள்ள ஈழத் தமிழர்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவர்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர, அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்திய மத்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு, சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்க வேண்டும்.

1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு-கிழக்கு தமிழர் பாரம்பரிய தாயகத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் மத்தியில், சர்வதேச சமூகத்தால் கண்காணிக்கப்பட்டு சுதந்திரமான சுதந்திர இறையாண்மை கொண்ட தனி நாடு ஈழத்தை விரும்பினால் உருவாக்கலாம்.

இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஈழத் தமிழ் மக்களையும், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும்  இந்திய மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தமிழ் மக்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாக்கவும் ஐ.நா. வேண்டும்.

1987 ஆம் ஆண்டு ஈழத் தமிழ்த் தலைவர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மற்றும் உறுதிமொழியின்படி, இனப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை அரசியலமைப்பின்13 வது திருத்தத்தை ஊக்குவிக்க வேண்டாம் என இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

1987ஆம் ஆண்டு தமிழ்த் தலைவர்களுக்கு இந்தியா வழங்கிய உறுதிமொழியின்படியும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க உடனடி மற்றும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உட்பட அனைத்து குற்றங்களையும் விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த இந்தியா உதவ வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இனப்படுகொலை, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவித்து, அதனை நிலைநிறுத்த ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில், இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )