
123 நாட்களாக நடந்த காலி முகத்திடல் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது; அங்கிருந்து வெளியேறுவதாக செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
போராட்ட களத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஆனால் போராட்டம் ஓயவில்லை என்றும், எதிர்காலத்தில் முழு இலங்கை மக்களுடன் புதிய முகத்துடன் புதிய ஆற்றலுடன் முன்வருவோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அண்மித்த பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மார்ச் 31 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தமை கோட்டா கோ கமவுக்கு பாரிய வெற்றியாக அமைந்தது. அதன் பின்னர் கோட்டா கோ கம செயற்பாடுகளில் இருந்தும் பலரும் விலகுவதாக அறிவித்து வந்தனர்.
எனினும் கடந்த 123 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து நேற்று புதன்கிழமை முதல் முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
நாட்டில் மே 9, ஜூன் 9, ஜூலை 9 ஆகிய திகதிகளில் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கின. மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.
எனினும் மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக ஜூன் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது.
அதேபோல ஜூலை 9 ஆம் திகதியும் பாரிய மக்கள் அலை அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன முற்றுகையிடப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (அப்போதைய பிரதமர்) தனிப்பட்ட இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பிரதிபலனாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.
அதன் பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கோட்டா கம செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டதுடன் நள்ளிரவில் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு ‘கோட்டா கோ கம’வை அங்கிருந்து முழுமையாக அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 3 ஆம் திகதி கோட்டை பொலிஸாரால் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்றுமாறும் போராட்டக்காரர்களை அங்கிருந்து 5 ஆம் திகதிக்கு முன்பாக வெளியேறுமாறும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எனினும் மேல் நீதிமன்றத்தில் சமர்க்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 123 நாட்களாக செயற்படும் காலி முகத்திடல் போராட்டகளத்திலிருந்து கூடாரங்களை அகற்றி அங்கிருந்து வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு நேற்று 10 ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
கோட்டை பொலிஸாரின் அறிவிப்புக்கு பின்னர் காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கமவின் பெரும்பாலான பகுதிகள் அகற்றப்பட்டு சகலரும் வெளியேற தொடங்கிய நிலையில் 15 க்கும் குறைவான கூடாரங்களிலேயே ஒருசில அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் பெருமளவான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயின் அங்கிருந்து முழுவதுமாக வெளியேறவுள்ளதாக போராட்ட கள செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் காலி முகத்திடலில் இருந்து முழுவதுமாக வெளியேறவுள்ளதாக கூட்டாக தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது. நகரங்களிலும் வட்டார அளவிலும் போராட்டம் தொடரும் என நம்புகிறோம் என்றார்.
போராட்ட களத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஆனால் போராட்டம் ஓயவில்லை என்றும், எதிர்காலத்தில் முழு இலங்கை மக்களுடன் புதிய முகத்துடன் புதிய ஆற்றலுடன் முன்வருவோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு நாட்டினதும் போராட்டங்களின் மையமாக காலி முகத்திடலாக மாறியுள்ளது. அமைப்பு மாற்றத்தை உறுதி செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவது இன்று கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இதுபோன்ற முயற்சிகளால் போராட்டங்களும் தீவிரமடையும். இது போன்ற போராட்டங்களை அரசு முடிவுக்கு கொண்டு வர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டா கோ கமவை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. போராட்ட களத்திலிருந்து கூட்டாக வெளியேறுவதாக செயற்பாட்டாளர்கள் அறிவித்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

