
சர்வ கட்சி அரசல்ல,ஆட்சிக்கே ஐ.ம.ச இணக்கம் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் சந்திப்பு; மீண்டும் செவ்வாய் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘சர்வகட்சி ஆட்சி’க்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, சர்வகட்சி அரசாங்கமாக அன்றி சர்வகட்சி ஆட்சியாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வகட்சி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து பஸ் ஒன்றில் ஜனாதிபதி செயலகம் சென்றனர்.
இதன்போது 2 மணித்தியாலங்கள் ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதன்போது புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக 19 ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் 22 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதில் திருத்தங்களை செய்ய வேண்டுமாயின் திருத்தங்களை முன்வைக்கலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்றைய கட்சிகள் சர்வகட்சி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.
இவ்வேளையில் சர்வகட்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், ஜனாதிபதி சர்வகட்சி ஆட்சி என்ற வசனத்தையே பயன்படுத்தினார். இதன்படி சர்வகட்சி ஆட்சிக்கு நாங்கள் இணங்குகின்றோம். கோத்தாபய கொண்டுவந்த விடயங்களை அவர் இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கின்றார். குறிப்பாக 20 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்கின்றார். இதற்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இதேவேளை மீண்டும் அடுத்த செவ்வாய்க்கிழமை நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்துள்ளோம் என்றார்.

