
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரணிலுக்கு விடுதலை கிடைக்குமா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்வது தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு வழங்குமாறு கோரி வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, அரசியலமைப்பின் 35 ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என நீதிமன்றில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வு பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 107 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தர்களின் உறவினர்களினால், தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மீதும் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

