​லண்டனில் நாமலின் உரைகள் ரத்து; இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்! புலம்பும் மொட்டு அணி

​லண்டனில் நாமலின் உரைகள் ரத்து; இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்! புலம்பும் மொட்டு அணி

​நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து விஜயத்தின் போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த உரைகள், அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டமையானது இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

நாமல் ராஜபக்ஷ சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர், எதிர்ப்புகள் எழும் என்று தெரிந்தே அந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் அவர் அங்கு சென்றார்.

இத்தகைய எதிர்ப்புக்கள் எமது தரப்புக்கு புதியவை அல்ல, இதனை விமர்சிக்கும் ‘சுத்திகரிப்புப் படையினர்’ முதலில் தங்களது அரசாங்கத்தின் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அடிமட்டம் முதல் அமைச்சரவை வரை பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.

அண்மையில் மீரிகம பிரதேச சபை தவிசாளர், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் இன்று தொழில்துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

பழைய விநியோகஸ்தர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் நெருங்கிய சகாக்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால், தற்போது நிர்மாணிக்கப்படும் வீதிகள் தரமற்று இருப்பதாகவும் அவை குழிவிழுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரியை விலைக் குறைவு என்ற போர்வையில் இறக்கிக் கொண்டுவருவது மின் உற்பத்தி நிலையத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் உணரவில்லை, இந்தத் தவறை மறைக்க முயல்வோர் எதிர்காலத்தில் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசாங்கத்திற்கு நிதி வழங்கிய பெரும் வர்த்தகர்களின் பிடியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சிக்கியுள்ளதால், அரிசி மாஃபியா மற்றும் கொள்கலன் மோசடிகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )