
தமிழ் கட்சிகளை ஒன்று சேர்க்கும் சுவிஸின் முயற்சி இடை நிறுத்தம்!; அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு அறிவிப்பு
இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு இப்போது காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற இருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் இந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல் நேற்று திங்கள் காலை முதல் சுவிஸ் தூதரக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடிந்தது.
தமிழர் தரப்புக்கள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் சுவிஸ் தூதரக முயற்சி ஒரு புறம் நடக்க, அதற்குச் சமாந்தரமாக மறுபுறத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றவிருந்த ஒரு கட்சி
அதேபோன்ற கூட்டம் ஒன்றை 19 ஆம் திகதிக்கு முன்னர் 15 ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முயற்சி எடுத்த பின்னணியில்,தன்னுடைய முயற்சியை உடனடியாக இடைநிறுத்தும் தீர்மானத்தை சுவிஸ் தூதரகம் மேற் கொண்டதாக அறியவருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் 15 ஆம் திகதி தாம் நடத்த உத்தேசித்த கூட்டத்துக்குத் மேற்படி கட்சி அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

