
தாந்தாமலையை பறிப்பதற்குச் சதி; தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக போர்க்கொடி
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளது. இவற்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் வெள்ளிக்கிழமை மாலை பிரதே சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்திலே அமைந்திருக்கின்ற எங்களுடைய பாரம்பரியமான – பூர்வீகமாக இந்துமதத்தை பேணிப் பாதுகாக்கின்ற வழிபாட்டுத்தலமான தாந்தாமலை முருகன் ஆலயத்தில் வியாழக்கிழமை யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக வந்து தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் இடம் என்ற மும்மொழிகளில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை நாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
உண்மையாகவே அவர்களை ஒரு திணைக்களமாக நாங்கள் பார்க்கவில்லை. இந்தப் பிரதேசத்திலே பிரதேச சபையின் ஊடாக, பிரதேச சபையின் அனுமதி எடுத்த பின்பு தான் ஒரு பெயர் பலகையை மாற்றலாம் என்று ஒரு திணைக்களத்துக்கு தெரிய வேண்டும்.அதனை நாங்கள் ஒரு திணைக்களமாக பார்க்கவில்லை. அவர்கள் பௌத்த மதத்தை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.
இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இது சிங்கள பௌத்த மக்களை பாதுகாக்கின்ற ஒரு திணைக்களத்தோடு மட்டுமல்ல அவர்களுடைய மதத்தை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகவும் நாங்கள் பார்க்கின்றோம்.
உடனடியாக அவர்கள் அந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும். இன்று நாங்கள் அதனை சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றோம். உடனடியாக அவை மாற்றப்பட வேண்டும். அகற்றப்படாத பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் இது நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அவர்களுடைய இந்த செயற்பாடுகள் நடைபெற்று வரு கின்றது.
இதனை எந்த ஒரு வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். ஆகவே எங்களுடைய மக்கள்,எங்களுடைய பிரதேசம்,எமது பிரதேசத்தில் இருக்கின்ற இந்து ஆலயங்களை நாங்கள் மையப்படுத்தி,அதாவது 99 வீதம் இந்துக்கள் வாழ்கின்ற ஒரு இடமாக இந்தப் பிரதேசம் இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நயவஞ்சக செயலை அவர்கள் செய்யக் கூடாது. இன்று உடனடியாக உரிய திணைக்களத்திக்கு எழுத்து மூலமாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கின்றேன். ஆகவே இவர்கள் உடனடியாக வந்து அந்தப் பெயர் பலகையை அகற்றாத பட்சத்தில் நான் திங்கட்கிழமைக்கு பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது ஒரு திணைக்களம் என்ற முறையில் இதனை நாங்கள் கூறி வைக்க விரும்புகின்றோம். இல்லாத பட்சத்தில் இன்றே நாங்கள் அதனை அகற்றி இருப்போம்.ஆகவே அவர்கள் இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிடில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.

