
ஒற்றையாட்சியை திணிக்க அரசு -தமிழரசு கூட்டுச் சதி; கஜேந்திரகுமார் கடும் சாடல்
தேர்தலில் தோற்றுப்போன செயலாளரும்,தேர்தலில் போட்டி போட முடியாத தலைவரும், ஒற்றையாட்சிக்கு மாறாக வாக்கை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பலத்தை பயன்படுத்தி மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர் மாறாக ஒற்றையாட்சியை மக்கள் மீது திணிப்பதற்கான மாபெரும் சதி முயற்சியே இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் ஜனாதிபதியுடனான சந்திப்பு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி,தமிழ் அரசுக் கட்சியுடன் பேசப் போவதாக இரண்டு வாரங்களுக்கு முன்னரே தெரியும். இந்த நிலையில் இனப் பிரச்சனை சம்பந்தமாக தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த தமிழ் அரசுக் கட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக தனியாகச் சென்று ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார்கள்.
சந்தித்தற்கு பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுமந்திரன் வெளியிட்ட முகநூல் பதிவும், தமிழ் அரசுக் கட்சி அனுர குமார திசநாயக்க உடன் பேசிய, சந்திப்பில் வலியுறுத்திய விடயங்கள் மிகவும் ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
தமிழ் அரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 2015 தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றன. அது படிப்படியாக குறைந்து தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது .அடிப்படையில் அவர்களின் வாக்கு வங்கி இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற சூழல் காணப்படுகிறது.
2015 – 2019 காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சுமந்திரனும் சம்பந்தனும் சேர்ந்து தயாரித்த ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பு வரைவுக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியில் இருந்த அரைவாசிக்கும் அதிகமான உறுப்பினர்கள் மாற்று வேலைத் திட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.
தமிழ் அரசுக் கட்சியினுடைய முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் கூட தமிழ் தமிழ் மக்கள் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணங்கி தலைமை வகிக்கவும் முன் வந்தார். அந்த தமிழ் மக்கள் பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட் அமைப்பினுடைய தலைவர் சித்தார்த்தன் இருந்தார். அதேபோல ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இணங்கியிருந்தார்.
தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைமைத்துவம்,சிங்கப்பூரில் ரகசியமாக ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இணங்கி விட்டார்கள் என்ற உண்மை அறியவருகின்ற இடத்தில் அதை முறியடிக்க வேண்டும் என்ற இடத்தில் தான் தமிழ் மக்கள் பேரவை என்ற முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராக நீண்ட காலம் இருந்த பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட பலர் தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிகளாக சேர்ந்திருந்தார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மாகாண சபை கூட ஏக்கிய ராஜ்யவுக்கு மாற்றீடாக யோசனைகளை தயாரித்தார்கள்.
2020, 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஏக்கிய ராஜ்ய வரைவை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தவில்லை.முற்று முழுதாக கைவிட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு, புதிய அரசியல் அமைப்புக்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டபோது, கட்சிகளிடம் யோசனையை சமர்ப்பிக்க கேட்டபோது, மாறாக அதிகார பகிர்வு சம்பந்தமாக வரலாற்றை குறிப்பிட்டு ஒரு கடிதத்தை முன்வைத்தார்களே தவிர ‘ஏக்கியராஜ்ய’ அரசியல் அமைப்பு வரைபு பற்றி ஒரு வார்த்தையும் கதைக்கவில்லை
ஆனால் 2024 தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திஸாநாயக்க முதல் தடவையாக, தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபை தான் கொண்டு வந்து நிறைவேற்றப் போவதாக அறிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பிரிந்திருந்ததால் தமிழ் தேசியக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை காட்டக்கூடிய நிலைமை இல்லாமல் போனதால், தேசிய மக்கள் சக்தி தாங்கள் தான் வடக்குக் கிழக்கில் கூடுதலான வாக்குகளை பெற்ற கட்சி என்ற ஒரு தவறான பொய்யான கருத்தை மிகப்பெரிய அளவில் கெட்டித்தனமாக முன்வைக்கக்கூடிய நிலையில்தான், நாங்கள் அவசரப்பட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆணை பெற்ற தரப்புகளிடம் பொதுநிலைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியை செய்தோம்.
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியே அந்த ‘ஏக்கிய ராஜ்ய’வை வலியுறுத்தாமல் இருந்த நிலையில், தமிழ் அரசுக் கட்சி கைவிட்டுவிட்டதாக அதன் தலைவர் ஆறு மாதங்களுக்கு மேலாக சுட்டிக்காட்டிய அரசியலமைப்பு வரைபை அந்தக் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சிக்குட்பட்ட ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்பு வரைவை கொண்டு வருவேன் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி இந்த தமிழ் அரசு கட்சியினுடைய பாராளுமன்ற குழுவும் தலைவர் செயலாளரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு வரைபை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்து எதுவும் செய்யத் தேவையில்லை. விட்ட இடத்திலிருந்து செய்ய வேண்டும். திரும்பவும் பேசத் தேவையில்லை என்ற கருத்தை கூட அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேட்கின்ற ஒவ்வொரு முறையும், ஏக்கியராஜ்யவை ஏற்கமாட்டோம் எதிர்ப்போம் என்று சொன்ன இடத்தில் அவர் இருக்கிற கூட்டத்தில் தான் வலியுறுத்தியப்பட்டதாக தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வமான செயலாளரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்தது, தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவர் உட்பட தமிழ் அரசுக் கட்சியினுடைய எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு செய்யப் போகின்ற மிகப்பெரிய துரோகமாக நாங்கள் அதை பார்க்கிறோம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் நிராகரித்த ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்பு வரைபை தயாரித்த பெரிய பங்காளியாக சுமந்திரன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை திட்டமிட்ட வகையில் தோற்கடிக்க வேண்டும் என்ற கோணத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரித்த நிலையில்,இன்று தோற்றுப்போன செயலாளரும் தேர்தலில் போட்டி போட முடியாத தலைவரும் அவர்களுடைய ஒற்றையாட்சியை நேசிக்கின்ற செயலுக்கு மாறாக வாக்கை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பலத்தை பயன்படுத்தி மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர் மாறாக ஒற்றையாட்சியை மக்கள் மீது திணிப்பதற்கு மாபெரும் சதி முயற்சி தான் இந்த நடவடிக்கையாக இருப்பதாக நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பை அனுர குமார திஸாநாயக்கவை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காக தான் தமிழ் கட்சிகளுடன் ஏற்கனவே ஆரம்பித்த பேச்சு வார்த்தைகளை முறித்தனர்.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தால் ஒற்றை ஆட்சி நிராகரிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்டு இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய சமஸ்டி தீர்வை மட்டும் தான் நாங்கள் வலியுறுத்துவோம்.அவ்வகையான நிலைப்பாட்டை மட்டும்தான் ஐக்கியத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு காரணத்தினால் எங்களுடன் அந்த பேச்சுவார்த்தையை நடத்தாமல் இருப்பதற்காகத்தான் போலி காரணத்தைக் காட்டி பேச்சு வார்த்தையை முறியடித்தார்கள்.
அவ்வகையான நிலையில் நேற்று ஒரு கடிதத்தைஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் செயலாளரின் ஒப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எனக்கு கையளித்தார்.
அந்தக் கடிதத்தை வாசித்த பொழுது,இனப்பிரச்சினைக்கு தீர்வு சம்பந்தமாக எந்த ஒரு கருத்தும் இல்லாமல் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன அந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வருவது சம்பந்தமாக பேசுவதற்கு மட்டும் தான் அழைத்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அன்றாட பிரச்சினைகள் அனைத்துமே, இனப் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதால்தான் அதற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பதை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து சுட்டி காட்டி வருகிறோம். உண்மையும் அதுதான் சின்ன குழந்தைக்கு கூட அது தெரியும்.
இனப் பிரச்சினையை தீர்க்காமல் ஏனைய விடயங்களை பேசுவது வெறுமனே ஒரு முழுமையாக அழுகிக் கொண்டிருக்கக் கூடிய புண்ணுக்கு மேலால் பிளாஸ்டர் ஒட்டுவது போன்றது. அது அழுகிக் கொண்டிருக்கின்ற புண்ணை சரிபடுத்தும் விஷயம் அல்ல.இதை தெளிவாக எங்கள் மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் அரசுக் கட்சி செய்யும் இந்த முயற்சி, 2009 ஆம் ஆண்டு மே 18 இல் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அதன் ஆயுதப் போராட்ட பிற்பாடு எத்தனையோ உயிர்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்களுடைய நலன்கள் சார்ந்து உரிமை சார்ந்து எந்த விட்டுக் கொடுப்பும் செய்யப்படவில்லை.
அதனால் தான் அந்த உயிர்கள் தியாகம் செய்ய வேண்டி வந்தது. உயிரா உரிமையா என்ற நிலையில் உரிமையை கைவிட்டால் உயிர் இருக்கும். உரிமை கைவிடாவிட்டால் உயிர் இருக்காது என்ற நிலையில் எங்களுக்கு உரிமை வேண்டும் என்று நாங்கள் உயிரை இழந்தாலும் பரவாயில்லை என்ற காரணத்தால் அந்த தியாகம் நடக்க வேண்டி வந்தது. இந்த 16 வருடத்தில் அந்த ஆத்மாக்கள் தான் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் அரசுக் கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை எங்கள் இனப் பிரச்சனைக்கான அடிப்படை தீர்வை எட்டாமல் நேர்மாறாக ஒற்றையாட்சிக்கு முடக்குவதற்கான ஒவ்வொரு செயலையும் அந்த உயிர் தியாகம் செய்த ஆத்மாக்கள் தான் வெற்றி பெறாமல் தடுத்து வருகிறது.
இன்றைக்கு மிக ஆபத்தான நிலைமை மீளவும் உருவாகியிருக்கிறது. மக்களுக்கு இந்த உண்மையை சொல்ல வேண்டும் எந்த அளவுக்கு தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வகையில்,தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைமைத்துவம் செயல்படுகிறது என்பதை சரியான முறையில் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் – என்றார்.

