
தமிழ்க் கட்சிகளின் இணைவு; பேச வாருங்கள் தமிழரசு அழைப்பு
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமைய அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்கு கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தேவை என கருதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஓர் பூர்வாங்க கலந்துரையாடலை நடாத்துவற்கு உத்தேசித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர்,கடிதம் குறித்து கூட்டணிக்குள் ஆராய்ந்து இயன்றளவு விரைவாக பதிலளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

