
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவிக்க வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 4 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டுகின்றார் . அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபடவில்லை.
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது.
தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன.
பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது.கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. என்றார்.

