
இந்தியாவின் நிதி தடுக்கப்படுகிறது; வடக்கின் அபிவிருத்தி மறுக்கப்படுகிறது
பொருளாதாரத்தில் நாடு அபிவிருத்தியடைய வேண்டுமென்றால் முதலில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், அப்போதே அச்சமின்றி முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்கள் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை பார்க்கும் போது இந்த வருடத்தின் கடைசி நேரத்தில்தான் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது. எங்களின் அதிகாரிகள் அந்த நிதியை திருப்பி அனுப்பி விடக்கூடாது என்று இரவு பகலாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கடந்த வரவு செலவுத் திட்டத்தை நல்ல வரவு செலவுத் திட்டமென அறிவித்தமை பிழையானது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.
ஏனென்றால் வருடத்தின் கடை நேரத்தில் மழைக்காலம் என்பதனால் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இதனால் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த முயலும் போது பல்வேறு விடயங்கள் முதலில் கையாளப்பட வேண்டும் என்பது எமது ஆலோசனையாகும்.
வன இலாகா தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏதேனும் விடயத்தை எங்கள் பிரதேசத்தில் செய்ய வேண்டும் என்றால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அபிவிருத்திக்கு கூடுதாலான பணத்தை ஒதுக்கினாலும் அந்த அபிவிருத்தி தடைபடுகின்றது என்றால் வனஇலாகா திணைக்களமும் அதற்கு காரணமாகும். பாரியளவிலான விவசாய காணிகளை அந்த திணைக்களம் பிடித்து வைத்திருக்கின்றது. இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இதுவே நடக்கின்றது. வீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் என்பன இந்த திணைக்களங்களால் தடைப்படுகின்றது. அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த திணைக்களம் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றது. எதற்கும் அடங்குவதாக இல்லை. எவ்வளவு நிதியை ஒதுக்கினாலும் இந்த திணைக்களங்களில் மிக மோசமான செயற்பாடுகளால் அந்த அபிவிருத்திகள் நடக்காது.
அபிவிருத்தியில் நாங்கள் இப்போதுதான் முன்னேறி வருகின்றோம். அயல் நாடான இந்தியா நிதியை வழங்க முனைகின்ற போது ஏன் அதனை தடுக்கின்றோம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு கொண்டு வர ஏன் மறுக்கின்றோம். காங்கேசன்துறை கப்பல்துறை முயற்சியை ஏன் மறுக்கின்றோம். தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பல் போக்குவரத்து நிலைப்பாட்டை ஏன் மறுக்கின்றோம். சுற்றுலாத்துறையே எமது நாட்டுக்கு கைகொடுக்கின்றது. இந்த விடயத்தில் எமக்கு உதவுவதற்கு இந்தியா வருகின்ற போது வடக்கு என்ற காரணத்தால் அதனை நிறுத்துகின்றீர்களா? .இந்த விடயத்தை இனம் சார்ந்த விடயமாக பார்க்கின்றீர்களா? இந்தியா தனது உதவியை நீட்டுகின்ற போது கைபிடித்து பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும் இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன்.
இதேவேளை இந்த பொருளாதாரத்தில் இருந்து நாங்கள் மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் அந்த முதலீடு எப்படி வந்தது அது விடுதலைப் புலிகளின் பணமா? என்று விசாரிக்கலாம் என்பதனால் எவரும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இதனை நீக்குவதாக அரசாங்கம் கூறினாலும் ஒரு வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனை செய்யாவிட்டால் எமது பொருளாதாரத்தை நாங்கள் இழக்கின்றோம் என்றே கூற வேண்டும் என்றார்.

