ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் கடல் வழியாக தப்பிச் சென்றனர்

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் கடல் வழியாக தப்பிச் சென்றனர்


அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களை கடல் வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரதான சந்தேக நபர், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலரையும் கடல் மார்க்கமாக தப்பிக்க வைத்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொழும்பு குற்ற விசாரணை பிரிவை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மீன்பிடி படகு மூலம் செவ்வந்தி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றவாளிகளை வெளிநாட்டுக்கு படகு மூலம் அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்தன் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேக நபர்களையும் இவ்வாறு படகுமூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் உதயபுரம் மூன்றாம் குறுக்குத் தெருவை வதிவிடமாகக் கொண்ட 29 வயதான ஏ.பீ. ஆனந்தன் என்ற சந்தேக நபர் திஹாரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபருக்கு சொந்தமான கிளிநொச்சியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து மைக்ரோ ராக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் படகுமூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் பிரதான சூத்திரதாரியாக இந்த ஆனந்தன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.


ஆனந்தன் தனது இளைய சகோதரர்கள் இருவருடன் இணைந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இரண்டு சகோதரர்கள் மீதும் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரம் ஏற்கனவே தடுப்புக் காவலில் தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை அண்மைக் காலங்களில் இந்த சகோதரர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் திகதி இலங்கையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் கடல் வழியாக தப்பி செல்வதற்கு இந்த நபர் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.


இவ்வாறு தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் யார் என்பது குறித்து தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தன் என்பவரின் கையடக்க தொலைபேசியை கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாகவும் குறித்த நபருடன் தொடர்பு பேணிய வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்பிலும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தன் என்ற குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )