
மகிந்தவை காட்டிக் கொடுத்த சிங்களவர்கள்; நாமல் திருடர் அல்ல -அர்ச்சுனா எம்.பி.
தங்களின் தலைவரான மகிந்த ராஜபக்ஷவை காட்டிக்கொடுத்து சிங்கள மக்கள் பெரும் தவறு செய்துவிட்டனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்காக உயிர்நீத்தவர்களுக்காக நான் முன்வருகின்றேன். ஆனால் நாட்டு மக்கள் பெரும் தவறு செய்துள்ளனர். தமக்காக இறந்த இராணுவத்தினர் மற்றும் தமது தலைவரை காட்டிக்கொடுத்துள்ளனர். மகிந்த ராஜபக்ஷ எனது தலைவரோ, தமிழ் மக்களின் தலைவரோ இல்லாவிட்டாலும் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால் அவரை சிங்கள மக்கள் காட்டிக்கொடுத்துள்ளனர்.
நாமல் உள்ளிட்டோர் திருடர்கள் என்று நானும் நம்பினேன். பொய்களை கூறிய போது நம்பினேன். இப்போது பொய்கள் வெளிவருகின்றன. எனக்கு தாய் தந்தை இல்லை. இங்கே எனது சகோதரர்கள் வந்துள்ளனர். அத்துடன் நாமலுக்கு எனது மரியாதை இருக்கும். இதனால் நாமல் குற்றம் செய்துள்ளதாக எவராவது கூறினால் அவருக்கு எதிராக வழக்கு தொடருங்கள். இங்கே யார் பைத்தியம், யார் தும்புக்கட்டை என்று தெரியும்.
மகிந்த ராஜபக்ஷ மீது கைவைக்க முடியாமையினால் எங்களை போன்ற நெத்தலிகள் மீது கை வைக்கின்றனர். சாமர சம்பத் அல்லது என்னையே கைது செய்கின்றனர். முடிந்தால் பெரிய இடங்களில் கை வைத்துக்காட்டுங்கள் என்று கூறுகின்றேன்.