
அர்ச்சுனாவை மீட்க நாம் முன்வருவோம்; அவரை பார்க்கச் சென்ற நாமல்
அர்ச்சுனா எம்.பியின் தலைவர் பிரபாகரன் என்றால் எனது தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை பார்வையிட நீதிமன்றத்திற்கு சென்றிருந்த வேளையில். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு வேலையில்லை என்றால் சின்ன சின்ன விடயங்களை தேடி நீதிமன்றங்களுக்கு கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்டம் இருக்கின்றது. அதன்படி அவர் சட்டத்திற்கு முகம்கொடுத்துள்ளார். அரசாங்கம் இதனை அரசியல் வேட்டையாடுவதற்காகவும் எம்.பிக்களை ஒடுக்குவதற்காகவும் பயன்படுத்தினால் அது தவறாகும்.
அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றத்தில் நன்றாக குரல் கொடுக்கின்றார். எதிர்க்கட்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்குவதுடன் வடக்கு மக்களுக்காக பாராளுமன்றத்தில் கதைக்கின்றார். அவரின் தலைவர் பிரபாகரன், எனது தலைவர் மகிந்த ராஜபக்ஷ இவர்கள் இருவரும் வேறுபட்டவர்களே.
எங்களின் தலைவர் அவரின் தலைவருக்கு அடித்தார். இப்போது அர்ச்சுனா எம்.பி. வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றார். அவ்வாறான அரசியல்வாதிக்கு எதாவது பிரச்சினையென்றால் நாங்கள் முன்வர வேண்டும்.
எனது கடவுளின் கொள்கை அகிம்சைவழியாகும். எனது மனதில் குரோதம் கிடையாது. எவருடனும் பழகுவோம். அர்ச்சுனா போன்ற வடக்கில் பல இளைஞர்களின் மண்டைகளுக்குள் அவசியமற்ற விஷம் மற்றும் வைராக்கியம் செலுத்தப்பட்டிருந்தன. அந்த வரலாறு உள்ளது. அதனை தீர்க்க வேண்டுமாயின் அனைவருடனும் பழகிப்பார்க்க வேண்டும் என்றார்.