மன்னார் போராட்டத்தில் மக்கள் மீதான தாக்குதல்; அசுர பலம் கொண்டு அடக்குவோம் தமிழருக்கு அரசு கூறியுள்ள செய்தி

மன்னார் போராட்டத்தில் மக்கள் மீதான தாக்குதல்; அசுர பலம் கொண்டு அடக்குவோம் தமிழருக்கு அரசு கூறியுள்ள செய்தி

மன்னார் மக்கள் தனியாக இல்லை அவர்களோடு வடகிழக்கில் வாழுகிற தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல முழு இலங்கை தீவிலும் வாழுகிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்களும் கூட உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி கொள்கிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்பதை நாங்கள் திட்டவட்டமாக குற்றச்சாட்டாக முன்வைக்கிறோம். வீதியை மறித்து செய்யப்படும் போராட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை சட்ட விரோதமாக கருதி இருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை கைது செய்திருக்க வேண்டும். அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் கடக்கிற சூழ்நிலையிலே அது நடாத்தியிருக்கிற இந்த காட்டு தர்பார் அவர்களுடைய அணுகுமுறை என்பது அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தொடர்பிலே அந்தப் போராட்டங்கள் பாரிய அளவிலே பரந்து விரிகின்ற பொழுது அரசாங்கம் அவை தொடர்பிலே எந்தவிதமான அணுகுமுறையை கையாள தொடங்கி இருக்கிறது என்பதற்கு ஒரு திட்டவட்டமான எடுத்துக்காட்டாகும்.

மன்னார் காற்றாலைக்கு எதிராக பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் சமூக நடவடிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், மதப் பெரியோர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்புகளை பிரதித்துவப்படுத்துகிற மக்கள் இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுவதுடன் கொழும்பிலே ஜனாதிபதி செயலகம் வரையிலே சென்று அவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். அரசாங்க அதிகாரிகளோடு பேசி இருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சனையை நிதானமாக கையாளமல் மக்களுடைய எதிர்ப்பு எழுந்திருந்த நேரத்திலே அதை நிதானமாக கையாள வேண்டிய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமான முறையிலே அந்த மக்களை அடித்து துவைத்து இருக்கிறது. சிலரை காயப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கும் கூட சேர்த்து அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் நாங்கள் கருத வேண்டி இருக்கிறது. அதாவது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய அசுர பலத்தை பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதை ஒரு எச்சரிக்கையாக அரசு சார்பு அறிவிப்பாக எடுத்துக் கொள்ள நாங்கள் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். இதை பொறுப்போடு நான் சொல்லிக் கொள்கிறேன்.

இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமான தீர்வுக்கு வர முடியும். ஆனால் அதை விடுத்து இந்த போராட்டத்தை நசிக்க விட்டோம் அல்லது நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கிற அந்த ஆதரவு கடமையைத்தான் அரசாங்கம் செய்யப் போகிறது என்று அர்த்தம்.

மன்னார் விவகாரத்திலே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிற எமது மக்களுக்காக குரல் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். காட்டு தர்பார்களை எங்களது மண்ணிலே நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது. என்பதை சொல்வதற்கு ஒவ்வொரு தமிழ் தேசிய அரசியல் நடவடிக்கையாளரும் கடமைப்பட்டிருக்கிறார். அதை விட்டுவிட்டு பாலுக்கு காவல் பூனைக்கும் தோழர் என்ற முறையிலே எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள் எவரும் குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளும் செயல்படக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே விடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்கிறது. மன்னார் தமிழ் மக்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து உரிமை போராட்டத்திற்கு வலு சேர்த்து வந்திருக்கிற மக்கள்.

இந்த போராட்டம் விஸ்வரூப அடிப்படையில் ஒட்டுமொத்தமாக வடகிழக்கிலும் அல்லது அதற்கு அப்பாரும் சென்று முழு இலங்கை தீவிலும் கூட ஒரு பாரிய மக்கள் அலை எழுவதை தடுக்க முடியாது என்பதையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பொறுப்புணர்வோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அரகல போராட்டத்தை பதவி ஏற்று சில மணி நேரங்களுக்குள்ளே அடக்குவதற்காக முடிவை அன்றைய புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்து எந்த அடிப்படையில் அந்த போராட்டத்தை அடித்து கலைத்தார் என்ற முறையை கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் கையாண்டு தோல்வி கண்ட ஒரு அணுகுமுறை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றில் தவறுகளிலே மற்றவர்களின் தவறுகளில் இருந்து இந்த அரசாங்கம் பாடம் படிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

மன்னார் மக்கள் தனியாக இல்லை அவர்களோடு வடகிழக்கில் வாழுகிற தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல முழு இலங்கை தீவிலும் வாழுகிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்களும் கூட உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி கொள்கிறோம் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )