
மன்னார் மக்களின் உணர்வுகளோடு நாங்கள் சேர்ந்து நிற்கின்றோம்
மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடிய அப்பாவிப் பொது மக்களையும், மதகுருக்களையும் பொலிஸார் இழுத்துச் சென்று அராஜகம் புரிந்திருக்கிறார்கள், இதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மக்கள் காற்றாலையை நிரந்தரமாக அமைக்க வேண்டாம் என கூறியா போராடுகின்றார்கள். காற்றாலையை அமைப்பதாக இருந்தால் மக்கள் நடமாட்டம் இல்லாத சன நெரிசல் இல்லாத இடங்களில் அமைக்குமாறு தான் கூறுகின்றார்கள்.
ஆனால் மக்களின் உணர்வுகளை புரியாத அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மக்களைத் தாக்கியிருக்கிறது. இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அநுரகுமார திசாநாயக்கவிடம் நாங்கள் கேட்கின்ற கேள்வி, இதே மாதிரி பொலிஸார் பௌத்த மதகுரு மீது தாக்குதல் நடத்துவார்களா? அவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு அவர்களால் கடமையில் இருக்க முடியுமா?
மன்னார் மக்களுடைய உணர்வுகளோடு நாங்கள் சேர்ந்து நிற்கின்றோம். மக்களுடைய கோரிக்கைகள் ஈடேறுகின்ற வரைக்கும் நாங்கள் அவர்களுடன் இணைந்து இருப்போம். எங்களை பொறுத்தவரை இது ஒரு அராஜகம், வன்முறை இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என் அவர் தெரிவித்துள்ளார்.