
இது எந்த ‘சாரி’ அரசு; விமலுக்கு வந்த சந்தேகம்
தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் இடதுசாரியில் இருந்து முழுமையாக வலதுசாரியாக மாறி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அப்பால் வலதுசாரி அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,
மத்திய அதிவேக வீதியின் 37 கிலோ மீற்றர் பகுதி நிர்மாணப் பணி பல வருடங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்று பல்வேறு காரணங்களை காட்டி போலியான போராட்டங்கள், அந்த வீதி தொடர்பான பொய்யான மாயைகளை செய்யாமல் இருந்திருந்தால் இப்போது அந்த வீதி நிர்மாணிக்கப்பட்டு முழுமையடைந்திருக்கும். அந்த மாயையை உருவாக்கியவர்களே இப்போது பல வருடங்களின் பின்னர் தாமதத்திற்கான 5 பில்லியன் ரூபா நஸ்ட ஈட்டையும் வழங்கி, அன்று நிர்மாணிக்க செலவாகக்கூடிய தொகையை விடவும் மூன்று, நான்கு மடங்கிற்கும் அதிகளவான செலவிலேயே இப்போது குறித்த பகுதியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்கள் பணமும், தேசிய பணமுமே வீணடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதமாக சேமிப்பதாக கூறும் அரசாங்கமே, தாமதத்திற்கு காணரமாகி இப்போது முன்னரை விடவும் அதிகளவான செலவில் அதனை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை தற்போது மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மின்சார சபை சட்டமூலத்திற்கு எதிராகவே தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் வாக்களித்தனர். இவர்களின் தொழிற்சங்கத்தினரும் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டனர். அரச உரித்துடனேயே மறுசீரமைப்பை செய்ய வேண்டும் என்று அன்று கூறியவர்கள் இப்போது அதே சட்டமூலத்திற்கு பவுடர் பூசி, சர்வதேச நாண ய நிதியத்தின் கோரிக்கைளுக்கு அமைய மின்சார சபையை துண்டுகளாக்கி பல்வேறு நபர்களுக்கு ம் நிறுவனங்களுக்கும் காட்டிக்கொடுக்கவே செயற்படுகின்றனர்.
பெயரில் இடதுசாரிகளாக இருந்தாலும் இப்போது முழுமையாக வலதுசாரி அடிப்படைவாதிகளே இருக்கின்றனர். ரணிலுக்கும் அப்பால் இவர்கள் சென்றுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்திற்கு ஏற்றவாறே முன்னர் செயற்பட்டனர்.
இப்போது செவனகல சீனி தொழிற்சாலையை இந்திய நிறுவனத்திற்கு கொடுக்க அந்த தொழிற்சாலையை வீழ்த்தியுள்ளனர். அத்துடன் மின்சார சபை போன்று அரச வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களும், மின்சார பாவனையாளர்களும் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும் என்றார்.