
எமது கட்சியினரை புறக்கணிக்கும் அரசு அரசிற்கு விரைவில் கடிதம் ; ஜனாதிபதியுடனும் சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி முற்று முழுதாக தாங்கள் தான் அனைத்து வேலைகளும் செய்வதைப் போல காட்டுவதற்காக எமது கட்சியின் உள்ளூராட்சி சபை தவிசாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் எல்லா மாவட்டங்களிலும் புறக்கணித்து செயற்படுகிறார்கள் எனத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்புவதாக தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு முன்பதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் தலைவரும் நானும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சந்தித்தோம். அவர்களுடைய பல பிரச்சினைகள் சம்பந்தமாக விடயங்கள் அலசி ஆராயப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய செயற்குழு கூட்டத்தில் உள்ளூர் ஆட்சி மன்றங்களினுடைய நிலைமைகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து இருந்தோம்.
அதிலேயே அரசாங்கம் திட்டமிட்டு உள்ளூராட்சி சபை தவிசாளர்களையும் உள்ளூராட்சி சபை நிர்வாகத்தையும் புறக்கணிக்கிறதாக சகல மாவட்டங்களிலும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. நாங்கள் இதனை அவதானித்திருக்கிறோம். எங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கட்டும். உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருக்கட்டும். அனைவரையும் புறக்கணித்து தேசிய மக்கள் சக்தி முற்றும் முழுதாக தாங்கள் தான் அனைத்து வேலைகளும் செய்வதை போல எல்லா மாவட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்புவதாக தீர்மானித்திருக்கிறோம்.
ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கும் தீர்மானித்திருக்கிறோம் – என்றார்.