
சர்வதேச நீதி கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு திரட்ட யாழில் ஊர்திப் பவனி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டுச் சனிக்கிழமை (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குச் சர்வதேச நீதி கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் வகையில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் புகைப்படங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளைத் தாங்கிய ஊர்திப் பவனி வெள்ளிக்கிழமை (29) முற்பகல்-11 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து ஆரம்பமானது. இந்த ஊர்திப் பவனி யாழ்.நகரிலுள்ள நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபியடியை அடைந்து அங்கும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ். மத்திய நகர்ப் பகுதியை ஊர்திப் பவனி அடைந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குச் சர்வதேச நீதி கோரிய மாபெரும் பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தின் தென்மராட்சி, வலிகாமம் வடக்குப் பகுதிகளுக்கும் ஊர்திப் பவனி சென்றதுடன் அப் பகுதிகளிலும் பேரணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.