தொடரும் இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக வட, கிழக்கு எங்கும்15 ம் திகதி ஹர்த்தால்; தமிழ் அரசுக் கட்சியின் சுமந்திரன் அழைப்பு

தொடரும் இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக வட, கிழக்கு எங்கும்15 ம் திகதி ஹர்த்தால்; தமிழ் அரசுக் கட்சியின் சுமந்திரன் அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப் பகுதியில் கடந்த 7ம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டு வந்தவர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று அதிகாலையிலே முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து ஒரு குடும்பஸ்தருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்தினம் நான்கு ஐந்து பேர் அப்பகுதியில் இருக்கின்ற ராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு நால்வர் அங்கிருந்து தப்பிய பின்னர் ஒருவர் காணாமல் போய் இருந்ததாகவும் அவருடைய உடல் தான் அப்படியாக குளத்திலே வீசப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஆகையினாலே நாங்கள் இந்த விடயம் சம்பந்தமாக உடனடியான விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். உடனடியாக இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

நேற்று(சனிக்கிழமை) மாலை சில இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிய கிடைக்கிறது.இந்த விசாரணை நடவடிக்கையில் எந்தவிதமான தலையீடும் இல்லாமல் பொலிஸார் செய்ய வேண்டும்.

ஒரு சம்பவம் நடந்த பிறகு விசாரணை செய்யப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. மிக மோசமாக வடக்கு கிழக்கிலே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே வாழும் மக்களை அவர்கள் உபயோகிக்கிறார்கள், அந்த மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள், தங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர்களை கொண்டு செய்து முடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் மீது வன்முறையையும் பிரயோகிக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது.

செம்மணியில் மனிதப் புதைகுழியில் ஒரு சிறிய பகுதியிலேயே 147 எலும்புக்கூடுகள் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்னதாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இவை என்று எல்லோருக்குமே இப்பொழுது தெரிய வருகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக வட கிழக்கு நிலை கொண்டிருப்பதால் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே வேளையிலே இப் பகுதியில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பாக வருகிற15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதிலும் ஒரு கடையடைப்பை நாங்கள் கோருகிறோம். பாரியளவிலே எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக ஹர்த்தாலை கடைப்பிடிக்குமாறு நாங்கள் சகலரிடமும் கோருகிறோம்.

வர்த்தகர்கள் கூட இதில் சேர்ந்து இயங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் நட்டம் எமக்கு தெரியும் ஆனால் எங்களுடைய மக்களுக்கு ஏற்படுகிற பாரிய வன்முறை,பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை கருத்தில் கொண்டு சகல நடவடிக்கைகளும் பதினைந்தாம் திகதி கைவிடப்பட்டு வடகிழக்கு முற்று முழுதாக முடக்கப்படுவதற்கு நாங்கள் அனைவரதும் ஒத்துழைப்பையும் கோரி நிற்கிறோம்.

இதற்கமைய மற்றைய அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் , போக்குவரத்து சங்கங்கள் என அனைத்தும் தரப்பினரும் அன்றைய தினம் கடையடைப்புக்கும் ஹர்த்தாலுக்கும் பூரண ஆதரவை வழங்கி வடக்கு,கிழக்கை முற்றாக முடக்க ஆதரவை வழங்குமாறு கோருவதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )