
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைக்கு அசாத் மௌலானா கூட்டி வரப்படுவாரா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சில நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே பிள்ளையான் அறிந்திருந்தாக பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும், சனல் 4 ஊடகத்திற்கு இதற்கு முன்னர் அசாத் மௌலானா வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இராஜதந்திர ரீதியில் தேவையானவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுப்போம். இதுவரையில் வெளிவராத தகவல்கள் எமது விசாரணைகளில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். இதன்படி வெளியாகியுள்ள தகவல்களில் கூறப்படும் நபர்கள் விசாரணை நடவடிக்கைகளில் அடிப்படையில் கைதாகுவர். வெளிநாடுகளில் உள்ள சிலரை அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் விசாரணைகள் முடிவடையவில்லை.
குற்றச்செயல் இராச்சியமே இருந்துள்ளது. இதனால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தில் இந்த நடவடிக்கைகளை வேகமாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.