பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களுக்குஎதிராக மட்டுமா பாய்கிறது?

பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களுக்குஎதிராக மட்டுமா பாய்கிறது?

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு இனத்திற்கும் எதிரான சட்டம் அல்லவெனவும், அதனுடன் ஏதெனும் இனத்தை தொடர்புப்படுத்தி மக்கள் மத்தியில் கருத்துக்களை பரப்ப முயன்றால் அது தவறான செயற்பாடு என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமா செயற்படுத்தப்படுகின்றது என்ற கேள்விகள் சமூகத்தில் எழுவதாகவும், இந்த அரசாங்கம் வந்த பின்னர் இந்த சட்டத்தில் வேறு இனத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்றும் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம்கள் மட்டுமா இந்த சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் என்ற கேள்வியானது தவறானது. அவ்வாறான கருத்தை சமூகத்தில் பரப்ப எவருக்கும் உரிமை கிடையாது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் எவராவது கைதாகியிருந்தால் அதில் இனத்தை தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது. விசாரணைகளின் அடிப்படையிலேயே நடக்கின்றது. இதில் தமிழர்களும், முஸ்லிம்களும் மட்டுமே கைது செய்யப்படுவதாக எவராவது கூறுவார்களாக இருந்தால், ஒரு இனத்தை ஒடுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூற முயற்சிப்பார்களாக இருந்தாலும் அவ்வாறான எதுவும் கிடையாது.

கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இனங்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல. பொலிஸார் முன்வைக்கும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்படுகின்றனர். பயங்கரவாதம் அல்லது வேறு வகையிலான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்துவதற்கான சட்டத்தையே பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் எந்தளவுக்கு விமர்சனங்களை முன்வைத்தாலும் இப்போது செயற்படுத்துவதற்காக உள்ள சட்டமாக இருந்தால் அதனை செயற்படுத்த வேண்டியுள்ளது. எனினும் இதனை கூடிய விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எவ்வேளையிலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய பலமான சட்டம் உள்ள நிலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். அதுவரையில் இருக்கும் சட்டத்தையே செயற்படுத்த வேண்டியிருக்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )