பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது

பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது

பாகிஸ்தான் பொலிஸார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலைப்பின்னல் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மையம் போன்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை வைப்பிடச் செய்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு பங்களாதேஷினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு ஜிம்பாப்வே நாட்டவர் அடங்குவர்.

149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது.

மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் தங்கள் முதல் முதலீட்டில் ஒரு சிறிய வருமானத்தைப் பெற்றதாகவும், பின்னர் பெரிய தொகைகளை வைப்பிட வற்புறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கணினிகள், சர்வர்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு சிம் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

புதன்கிழமை, 149 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள், அவர்களில் 87 பேர் ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் 62 சந்தேக நபர்கள் ஜூலை 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )