செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் சாட்சிகளை பயமுறுத்தி மெளனமாக்க முயற்சி!

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் சாட்சிகளை பயமுறுத்தி மெளனமாக்க முயற்சி!

செம்மணி மனித புதைகுழி வழக்கில் சாட்சியங்களை முன்வைக்கும் போது பொது மக்களை பயமுறுத்தி அவர்களிடமிருந்து சாட்சியங்களை பெற முடியாத நிலையை ஏற்படுத்தி வழக்கை கொண்டு செல்ல முடியாமல் இக்கட்டான நிலைக்கு உட்படுத்த முயல்கிறார்கள் என வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பாக தனக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சித்துப்பாத்தி மயானத்துக்கு வெளியே அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னால் செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் அருகில் வந்த வாகனம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வந்தது.

நான் வசிக்கின்ற பகுதிகளுக்கும் குறித்த வாகனம் வந்திருந்தது.

என்னுடைய பார்வையில், குறித்த மர்ம வாகனம் வந்த காரணம் என்னை அச்சுறுத்துவதற்காகும். இந்த வழக்கு தொடர்பாக அன்றைய சூழலில் 1995 லிருந்து 2000 வரையான காலத்தில் இங்கே மிகக் கடுமையான செய்தித் தணிக்கைகள் இருந்த நிலைமையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயற்பாடுகளும் இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் இராணுவத்திடம் இருந்தபோது, மக்கள் தாமாக முன்வந்து சாட்சியை வழங்கவில்லை. இன்றைய நிலைமையில் நான் இந்த விடயத்தை எடுத்த காரணத்தால் அரியாலைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சாட்சியங்களை எனக்கு தந்து கொண்டிருக்கின்ற நிலையிலே சாட்சியங்களை பயமுறுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

1998 ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ தன்னுடைய புதைகுழி தொடர்பான சாட்சியிலே 15 வது புதைகுழியாக சொன்ன ஏ9 வீதி பொன்னம்பலம் சந்தி அருகில் உள்ள இராணுவ முகாம் பகுதி கிணற்றிலிருந்து அகழ்வு இடம்பெற்றது. அதற்கு பின்னால் இப்போதும் அங்கு இராணுவ முகாம் இருக்கிறது. அந்தத் தனியார் காணியில் இருக்கின்ற இராணுவ முகாமிற்கு தான் குறித்த வாகனம் சென்றதை நான் அவதானித்தேன்.

அதனை விட சில தினங்களாக இந்த பகுதியிலேயே விசேட அதிரடிப் படை,இராணுவத்தின் பிரசன்னம் வழமைக்கு மாறாக அதிகமாக உள்ளது. இவ்வாறு சாட்சியங்கள் முன்வைக்கும் போது பொது மக்களை பயமுறுத்தி அவர்களுடைய சாட்சியங்களை பெற முடியாமலும் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாமலும் இக்கட்டான நிலைக்கு உட்படுத்த முற்படுகிறார்கள்.

எந்த ஒரு அச்சுறுத்தல் வந்தாலும் எவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இந்த வழக்கில் உறுதியாக நான் இருக்கின்றேன். மக்களும் உறுதியாக இருக்கிறார்கள். இந்த வழக்குக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கான அனைத்து செயல்பாட்டையும் நான் செய்வேன் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )