
நீதிமன்ற வழக்கையும் மீறி காணி அபகரிப்புக்கு முயற்சி சபையில் செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு
மன்னார் பள்ளிமுனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை மீட்டெடுக்க காணியினுடைய உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தொடுத்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் காணிகளை அரச சொத்தாக மாற்றியமைக்க முயற்சிப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 27இன் கீழ் 2இல் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கூற்றை முன்வைத்தபோதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் 3 முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மன்னார் மாவட்டத்தின் கீழ் து பள்ளிமுனை என்னும் கிராமம் வருகின்றது . இங்கு வாழ்கின்ற மக்கள் கடற்றொழிலினையே தமது வாழ்வாதாரமாக கொண்டு கடலினை அண்டி வாழந்து வருபவர்கள்.இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற கிராமம். இந்த கடலினை அண்டியதாக 24 குடும்பங்கள் 10 பேர்ச் காணித் துண்டில் அரசாங்கத்தினால் வீடு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் 1984ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் வரை வாழ்ந்து வந்தன
இது தனிநபருக்கு சொந்தமான காணி. ஆனால் 1984 ம் ஆண்டு இக்காணி துண்டுகளை வீடமைப்புத்தினைக்களம் வேண்டி வீடுகளை அமைத்து குடியேற்றதிட்டம் ஒன்றை நிறுவி மீளவும் அங்கு
குடியேறியவர்களுக்கு விற்றுஅதற்குரிய பணத்தையும் பெற்றுக்கொண்டதும்இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.இது தனிநபருக்குசொந்தமானகாணிகள்(மொத்தம் 2ஏக்கர் 02 பேர்ச் ) இதற்குரிய உறுதிப் பத்திரங்களும் இவர்களுடைய கைகளில் இருக்கின்றன.
யுத்தம் காரணமாக இந்த மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த பூர்வீக காணிகளையும், வீடுகளையும். கைவிட்டு
இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.1990ல் மக்கள் இடம்பெயர்ந்த பின்பு இது ராணுவம், பொலிஸ், தற்பொழுது கடற்படையினரின் முகாமாக இருப்பிடமாக மாறியிருக்கிறது. இவர்கள் பொதுமக்களுக்கு சொந்தமான குடியிருப்புக்களை ஆக்கிரமித்து தங்களது நலன் கருதி தொடர்ந்தும்
அரசாங்கத்துடன் இணைந்து தங்களது சொத்தாக மாற்றிக்கொள்ள பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் காணியினுடைய உரிமையாளர்கள் இவற்றை மீட்டெடுப்பதற்காக நீதிமன்றில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனையும் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இந்த காணிகளை அரச சொத்தாக மாற்றியமைக்க முயற்சிக்கிறது.ஆகவே இந்தக்காணிகளை மீண்டும் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.