
கடற்படையினரின் வசமுள்ள மன்னார் காணிகளை விடுவிக்க முடியாது
தேசிய பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் மன்னார் பள்ளிமுனை பகுதியில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க முடியாது.காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடோ அல்லது பிறிதொரு காணியோ வழங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 27 / 2 இன் கீழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த மன்னார் பள்ளிமுனை கடற்படை வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் பள்ளிமுனை கடற்கரை வீதி பகுதி காணிகள் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. முன்வைத்துள்ள கேள்விகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த காணி யுத்த காலத்தில் இருந்து கடற்படையினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடற் பகுதி கண்காணிப்பு, போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நிமித்தம் கடற்படையினர் இந்த காணிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த காணிகளுக்குள் கடற்படையினர் 8 கட்டிடங்களை நிர்மாணித்துள்ளனர்.
இந்த காணிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து மன்னார் பிரதேச சபை ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்த காணிகளின் பெறுமதி மதீப்பீடு செய்யப்பட்டு அரச மதிப்பீட்டுத் திணைக்களம் 2024.10.16 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கமைய இந்த காணிகளின் பெறுமதி 150.15 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முலோபாய விடயங்களுக்கு இந்தக் காணிகள் மிகவும் முக்கியம் . இந்த பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.இந்த காணிகளை பராமரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கும், பின்னர் கடற்படைக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்காக இந்த காணிகளை பயன்படுத்துவது அவசியம் .எனவே காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு அல்லது பிறிதொரு பகுதியில் காணி வழங்குவதற்கு மன்னார் பிரதேச சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.