
அரசின் வடக்கு காணி சுவீகரிப்புக்களை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்; 4 தூதுவர்களிடம் தமிழ் தேசியப்பேரவை வலியுறுத்தல்
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை அரச சுவீகரிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்எம்.பி. தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள 4 முக்கிய இராஜதந்திரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கை அவரது அலுவலகத்திலும், இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. சத்யாஞ்சல் பாண்டேயை முற்பகல் 10.15 மணியளவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலும், இலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சியை முற்பகல்-11.30 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திலும், நேற்று மாலை 3 மணியளவில் இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஸ்ஸை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலும் சந்தித்தனர்
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் சந்திப்பில் உடனிருந்தார்.
குறித்த சந்திப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விசேடமாக நாங்கள் மூன்று விடயங்களை இந்த சந்திப்பில் முன் வைத்தோம்.வடக்கு மாகாண கரையோர காணி சுவீகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என்பதை வெளிநாட்டு தூதர்களிடம் வலியுறுத்தியிருந்தோம்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் போர்க்காலம் காரணமாக அனைத்து சொத்துக்களையும் ஆவணங்களையும் இழந்துள்ள நிலையில், சுனாமி அனர்த்தம் 2004 ஆம் ஆண்டு மோசமாக கரையோர பிரதேசங்களை தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதிகளில் இது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது.போர்க்காலம் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள சரி அரைவாசி மக்கள் நாட்டில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்குள் காணிஆவணங்களை உறுதிப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அந்த வர்த்தமானி உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். குறித்த வர்த்தமானி அறிவித்தல் இயற்கை நீதிக்கு மாறானது என்பதை சுட்டிக்காட்டினோம்.
தேர்தல் காலத்தில் ரகசியமாக வர்த்தமானியை வெளியிட்ட அரசாங்கத்தின் உள்நோக்கம், காணிப்பிரச்சினை தீர்ப்பதல்ல. மாறாக மக்களிடம் உள்ள ஆவணங்களில்லாத காணி என்ற குறைபாடுகளை பயன்படுத்தி அரச காணிகளாக சுவீகரிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர்.ஆவணங்களில் குறைபாடு உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நிவர்த்தி செய்து சரியான முறையில் காணிகளை கையாள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வர்த்தமானி ஊடாக செய்ய வேண்டிய அணுகுமுறை என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை சுட்டிக் காட்டினோம்.
இரண்டாவதாக குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினோம்.குருந்தூர் மலையில் கடந்த அரசாங்க காலத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிகளை தாண்டி 325 ஏக்கர் காணியை விகாரைக்கு தேவைப்படுவதாக சட்டவிரோத குருந்தூர் மலை புத்தபிக்கு கேட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க காலத்தில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த காணிகள் மக்களுடைய விவசாய தேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாயம் செய்த இரண்டு நபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்த நிலையிலும் புத்த பிக்குவும் பொலிஸாரும் அந்த தீர்மானத்தை மீளும் வகையில் செயற்படுவது ஏற்கமுடியாது. குருந்தூர் மலை அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக மீன்பிடியில் ஈடுபட்ட மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர். குளத்தில் உள்ள தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் வெளிநாட்டு தூதர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.
மூன்றாவதாக சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பில் வலியுறுத்தினோம். அரசாங்கம் தையிட்டி விகாரையை சட்டவிரோதமாக கட்டியுள்ளோம் என்பதை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தாலும் கூட அந்த காணிகளை உரிமையாளர்களிடம் வழங்காமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து விகாரைக்கு விட்டுக்கொடுக்க வைக்கும் செயற்பாட்டை சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம்.
மக்களுடைய காணிகளைப் பிடித்து விகாரையை அடாத்தாக கட்டியது என்பதை சட்ட விரோத கட்டிடமாக கருதி, சட்டவிரோத கட்டிடங்கள் எவ்வாறு அகற்றப்படுமோ அதேபோல இதுவும் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.
பிரித்தானியாவும் கனடாவும் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்பில் இயங்கிக் கொண்டிருக்கிற நாடுகளாகும்.ஐக்கிய நாடுகள் சபையின் மட்டத்தில் இரண்டு நாடுகளும் இந்த பிரச்சினைகள் எழுப்பப்பட வேண்டும் என்று சொல்லி இதனை முறைப்பாடு செய்தோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதிக்கும் இந்த கடப்பாடு இருக்கின்றது என்பதை அவருக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேலான மக்கள் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். திரும்ப அவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு தங்கள் காணிகள் சுவீகரிக்கப்படும் இடத்தில் அவர்கள் வரமுடியாத நிலை இருக்கும். இந்தியாவுக்கு ஒரு கடமை இருக்கிறது. அங்கே இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களை இந்தியா ஏற்காத பட்சத்தில் அந்தந்த மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்குரிய கடமை இருக்கின்றது என்பதற்காக இந்தியத் துணைத் தூதரையும் நாங்கள் சந்தித்தோம் என்றார்.