
வடக்கு உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க இடமளிக்கக் கூடாது; தமிழரசுக் கட்சிக்கு ‘சங்கு’ ஆதரவு
வடக்கு உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆனால் அவர்கள் ஆட்சியை பிடிக்காத வகையில் தமிழர் தரப்பாக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ்க் கட்சிகள் ஆட்சியமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தெடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளே இங்குள்ள ஒவ்வொரு சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டோடு இருந்தனர்.
அதிலும் தமிழர் பிரதேசங்களில் தமிழ்க் கட்சியொன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தனர். இதற்கமைய தமிழ் அரசுக் கட்சி பல இடங்களிலும் முன்னிலையில் இருந்தாலும் வேறு தமிழக் கட்சிகள் முன்னிலையில் இருந்தாலும் தமிழ்த் தேசிய தரப்பு என்ற அடிப்படையில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அதே போன்று நாங்களும் முன்னிலையில் இருக்கும் இடங்களில் அதே விட்டுக் கொடுப்புடன் ஆட்சி அமைப்போம்.
ஆக தமிழ் அரசுக் கட்சி தான் வடக்கு கிழக்கில் பல இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாலும் தமிழ்க் கட்சியொன்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதாலும் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவோம்.
இதேபோன்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு சில இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அந்த சபைகளில் அவர்களும் ஆட்சி அமைக்கலாம். அவர்களும் எம்முடன் பேசி இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதேவேளை வன்னி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியை பிடிக்காத வகையில் தமிழர் தரப்பாக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ்க் கட்சிகளே அங்கும் ஆட்சியமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.