
விசாரணைகளின் போது தேவைப்பட்டால் அசாத் மௌலான கூட்டி வரப்படுவார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் போது தேவைப்பட்டால் பிள்ளையானின் செயலாளராக செயற்பட்ட அசாத் மௌலானவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 ஊடகத்தில் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் பிள்ளையானின் செயலாளராக செயற்பட்ட தற்போது வெளிநாட்டில் இருக்கும் அசாத் மௌலானவை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
இந்த விசாரணைக்கு அவசியமான எவரையும் விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக நாட்டுக்கு கொண்டுவரவோ, அவர்கள் நாட்டில் இருந்தால் அவர்களை விசாரணைகளில் தொடர்புபடுத்தவோ தயங்கப் போவதில்லை. இதனால் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
இதேவேளை விசாரணைகளை எவருக்கும் குழப்பக்கூடாது. விசாரணை நடத்துபவர்கள் அந்த விசாரணைகளை முன்னெடுப்பர். ஏன் சில குழுக்கள் இதில் குழப்பமடைந்துள்ளன என்று தெரியவில்லை. திடீரென வருபவர்கள் -விசாரணைகளை நடத்துபவர்கள் வெறு நபர்கள், அவர்கள் அதனுடன் தொடர்புடையவர்கள் அல்ல. குறிப்பிட்ட நபர்கள் பிரதான சூத்திரதாரிகள் அல்ல என்றெல்லாம் சிலர் ஊடக சந்திப்புக்களை நடத்தி கூறுகின்றனர். இவ்வாறு குழப்பமடையத் தேவையில்லை. விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கூறிய பின்னர் ஊடக சந்திப்புக்களை நடத்தி கருத்துக்களை கூறலாம் என்றார்.