
பிள்ளையான் என்ன கூறப்போகின்றாரோ என்று ரணில் பெரும் அச்சத்தில்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் விசாரணைகளில் என்ன கூறப்போகின்றாரோ என்ற பயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது பயணத்திற்கு இடையூறுகளை செய்யும் குழுக்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் இருந்தவர்களும் அதனுடன் தொடர்புபட்டிருந்த அதிகாரிகளும் மக்களுக்கு பொய்களை கூறி இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இந்த இடையூறுகளையும் கடந்து நாங்கள் மக்கள் பலத்துடன் முன்னால் செல்ல வேண்டும்.
இப்போது பழைய இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றன. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றது.
இவ்வேளையில் குழப்பமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் குற்றப் புலனாய்வு பிரிவினர் அதற்கு இடமளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து கம்மன்பில அவருக்கு உதவுவதற்கு முயற்சித்துள்ளார். பிள்ளையானின் சட்டத்தரணி நானே என்று பிள்ளையானை சந்திக்க வேண்டுமென்று கூறி சந்தித்துள்ளார். பிள்ளையான் கிழக்கில் எவ்வளவு குற்றங்களை செய்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். பெருமளவான பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் சந்தேகங்கள் உள்ளதால் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வேளையில் அவரை மீட்கும் நடவடிக்கையின் பிரதானியாக உதய கம்மன்பில செயற்படுகின்றார்.இவர் கடந்த காலங்களில் சிங்கள பௌத்தம் என்று முன்னின்றவர். இப்போது குழப்பமடைவது ஏன்? குற்றங்களுடன் தொடர்புடையவரை கைது செய்யும் போது அவர் என்ன கூறப் போகின்றார் என்ற பயம் மற்றையவர்களுக்கு இருக்கும். பிள்ளையான் என்ன கூறப் போகின்றார் என்ற பயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருக்கலாம். இப்போது உதய கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாகியுள்ளார். இவர் எங்கேயாவது வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளரா என்றால் அவ்வாறு எதுவும் தெரியாது. இப்போது பிள்ளையானின் வழக்கு தொடர்பிலேயே முதலில் வருகின்றார் போகின்றார்.
நாங்கள் இப்போது குற்றவாளிகளுக்கு சட்டங்களை செயற்படுத்தும் போது அதனுடன் தொடர்புடைய குழுக்கள் இடையூறு செய்கின்றன. ஆனால் இவ்வாறான இடையூறுகளுடன் நாங்கள் வெற்றியை நோக்கி போகின்றோம் என்றார்.