நானும் ரௌடி தான்!; மார்தட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர்

நானும் ரௌடி தான்!; மார்தட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்

கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர்.அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணி இடம்பெறும்.

வடக்கிலும் மண் கடத்தல் காரர்கள் உள்ளனர், ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகர் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர்.இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கி திரிந்தவர்கள்தான் இப்படி சொல்கின்றனர்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )