
டிரம்ப்பின் நடவடிக்கையால் இலங்கையில் தங்கத்தின் விலை 262,000 ரூபாவாக உயர்வு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன்படி, நேற்று வியாழக்கிழமை (17) நிலவரப்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக 3,345 டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவி இயக்குநர் இந்திக பண்டார,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்வை வரி அறிவிப்பால், உலக சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றார்.
மேலும், உலகளவில் தங்கத்தின் விலை உயர்வை பாதிக்கும் காரணிகளில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை நேற்று வியாழக்கிழமை சாதனை அளவை எட்டியுள்ளது.
இலங்கையில் தினசரி தங்க விலை குறித்த நம்பகமான தகவல்களை வெளியிடும் GOLDCeylon Gold News Network,இன் தகவல்களின்படி, நேற்று கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
(16) இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 238,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 259,000 ரூபாவாகவும் காணப்பட்டது.