
உள்ளூராட்சி சபைகளை வெல்வோம் 2029 இல் நாட்டை ஆள்வோம்
2018 ஆம் ஆண்டு பெரு வெற்றி பெற்றதை போன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அதனைத் தொடர்ந்து 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் களமிறங்குகின்றோம் . சிறந்த வர்களை வேட்பாளர்களாக களமிறக்குவோம். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரத்தில் இறங்குவோம். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று இம்முறையும் பெரு வெற்றி பெறுவோம்.
தேசிய மக்கள் சக்தியின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி மக்களை தவறாக வழிநடத்தியது. இதற்கு மக்கள் தகுந்த பாடம்புகட்டுவார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் பின்னடைவை எதிர்கொள்ளும் . கொழும்பு உட்பட முக்கிய பிரதேச சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்.
இதன் தொடர்ச் சியாக 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன பலமடையும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.