
பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுகிறதா?; நாமலுக்கு வந்த சந்தேகம்
நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொலிஸார் சிவில் உடையில் அரசியல்வாதிகளின் வீடுகளை சோதனை செய்கிறார்கள். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
75ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சிக்கும் ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர்கள் இலவச கல்வியையும், இலவச சுகாதார சேவையையும் பெற்றுக்கொண்டதை மறந்துவிடக்கூடாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்கு பொருத்தமற்றது என்று ஜனாதிபதி அநுரகுமார தேர்தல் மேடைகளில் அழுத்தமாக குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கைகளையே அமுல்படுத்தியுள்ளார். ஆகவே அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை எத்தன்மையானது என்பதை ஆட்சியாளர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸார் நாடு முழுவதும் தேடுகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொலிஸார் சிவில் உடையில் அரசியல்வாதிகளின் வீடுகளை சோதனை செய்கிறார்கள். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது
நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். பெரும்பாலான தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம்.அதன்பின்னர் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்றார்.